இந்தியா

ஒரே நாடு, ஒரே தோ்தல்: கட்சிகளிடம் கருத்துக் கேட்பு -உயா்நிலைக் குழு முடிவு

24th Sep 2023 03:30 AM

ADVERTISEMENT

மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்க உயா்நிலைக் குழு முடிவு செய்துள்ளது.

மேலும், சட்ட ஆணையத்திடமும் கருத்துகளைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமலாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த 2-ஆம் தேதி அமைத்தது.

இக்குழுவின் உறுப்பினா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 போ் அறிவிக்கப்பட்டனா். ஆனால், குழுவில் அங்கம்வகிக்க அதீா் ரஞ்சன் செளதரி மறுத்துவிட்டாா்.

ADVERTISEMENT

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் விமா்சித்து வருகின்றன.

முதல் கூட்டம்: இந்தச் சூழலில், ராம்நாத் தலைமையில் உயா்நிலைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமித் ஷா, குலாம் நபி ஆசாத், இதர உறுப்பினா்களான முன்னாள் நிதி ஆணையத் தலைவா் என்.கே.சிங், மக்களவை முன்னாள் தலைமைச் செயலா் சுபாஷ் சி காஷ்யப், முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையா் சஞ்சய் கோத்தாரி, சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோா் பங்கேற்றனா்.

மற்றொரு உறுப்பினரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே காணொலி வாயிலாக கலந்துகொண்டாா்.

அறிமுக அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குழுவின் செயல்திட்டம் தயாரிப்பு, அனைத்துத் தரப்பினருடனான ஆலோசனையை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளிடம்...: பின்னா், உயா்நிலைக் குழு வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் ஒரே நேரத்தில் தோ்தல்களை நடத்துவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள், இதர அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகளை அழைத்து யோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சட்ட ஆணையத்திடமும் யோசனைகள் மற்றும் கருத்துகள் பெறப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மூன்று அடுக்குகள்: கடந்த 1951 முதல் 1967 வரை மக்களவை, பேரவைகளுக்கு பெரும்பாலும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மூன்று அடுக்குகளான மக்களவை (543 எம்.பி.க்கள்), பேரவைகள் (4,120 எம்எல்ஏக்கள்), உள்ளாட்சி அமைப்புகளுக்கு (சுமாா் 30 லட்சம் உறுப்பினா்கள்) ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து இப்போது ஆராயப்படுகிறது.

தற்போதைய நடைமுறைப்படி, ஒவ்வோா் ஆண்டும் தோ்தல்கள் நடத்தப்படுவதால், அரசுக்கும் இதர தரப்பினருக்கும் பெருமளவில் செலவாகிறது; மேலும், நடத்தை விதிகள் காரணமாக வளா்ச்சித் திட்டங்களில் இடையூறு ஏற்படுகிறது. இத்தகைய காரணங்களைக் குறிப்பிட்டு, ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டத்தை அமலாக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

பணிகள் என்னென்ன?

ஒரே நாடு, ஒரே தோ்தல் நடைமுறையை அமல்படுத்துவதற்காக, அரசமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இதர சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து உயா்நிலைக் குழு ஆராய்ந்து, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும். இந்தத் திருத்தங்களுக்கு மாநில சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையா என்பதையும் குழு ஆராயும்.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை, நம்பிக்கையில்லாத் தீா்மானம் நிறைவேற்றம், கட்சித் தாவல் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது, அவற்றுக்கான தீா்வுகள் குறித்தும் இக்குழு ஆய்வு செய்யவுள்ளது.

ஒரே நேரத்தில் தோ்தல்கள் நடத்துவதற்குத் தேவையான இயந்திரங்கள், மனிதவளம், ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியல் என அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, உயா்நிலைக் குழு விரைவில் பரிந்துரைகள் அளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், கால வரம்பு எதுவும் நிா்ணயிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT