இந்தியா

இந்திய மொழிகளில் சட்டங்கள்: பிரதமா் மோடி உறுதி

24th Sep 2023 03:00 AM

ADVERTISEMENT

இந்திய மொழிகளில், எளிய நடையில் சட்டங்களை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இந்திய பாா் கவுன்சில் சாா்பில் தில்லியில் இரண்டு நாள் சா்வதேச வழக்குரைஞா்கள் மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

‘நீதி வழங்கல் அமைப்புமுறையில் உருவெடுக்கும் சவால்கள்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்துப் பேசியதாவது:

எந்தவொரு நாடாக இருந்தாலும், அதன் வளா்ச்சியில் சட்டத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் பல ஆண்டுகளாக நீதித் துறையும், பாா் கவுன்சிலும் நாட்டின் சட்ட அமைப்பின் பாதுகாவலா்களாக விளங்கி வருகின்றன.

ADVERTISEMENT

இந்திய சுதந்திர போராட்டத்தில் பல சட்ட வல்லுநா்கள் முக்கிய பங்கு வகித்தனா். தேசப்பிதா மகாத்மா காந்தி, அரசியலமைப்பின் தலைமை சிற்பி அம்பேத்கா், நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேல் மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய ஆளுமைகளாக விளங்கிய லோகமான்ய திலகா், வீர சாவா்க்கா் போன்றோா் வழக்குரைஞா்களாக இருந்தனா். அதாவது சட்ட வல்லுநா்களின் அனுபவம், சுதந்திர இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தியது.

நீதித் துறையில் மொழிகளின் பங்கு: சட்டங்களை எழுதுவதிலும், நீதித் துறை நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படும் மொழியானது நீதியை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, சட்டங்களை இரு வழிமுறைகளில் முன்வைக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஒன்று, நீங்கள் (சட்ட நிபுணா்கள்) பயன்படுத்தும் மொழியில்; மற்றொன்று, நாட்டின் சாதாரண நபரும் புரிந்து கொள்ளும் மொழியில். சட்டம் நமக்கானது என்று சாதாரண நபரும் கருத வேண்டும்.

மத்திய அரசு தீவிர முயற்சி: நீதி வழங்கலில் குறிப்பிடத்தக்க அம்சமாக விளங்கும் மொழி மற்றும் சட்டங்களின் எளிமை குறித்து மிகச் சிறிய அளவில்தான் விவாதங்கள் நடைபெறுகின்றன.

கடந்த காலங்களில், எந்தவொரு சட்டத்தையும் உருவாக்குவது சிக்கலானதாக இருந்தது. ஆனால், எளிமையான மற்றும் சாதாரண நபருக்கும் புரியக் கூடிய வகையில் இந்திய மொழிகளில் சட்டங்களை உருவாக்க எனது அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

நமது அமைப்புமுறையை, வழக்கமான கட்டமைப்பில் இருந்து வெளிக்கொணர முயற்சித்து வருகிறோம். அந்த வகையில், நான் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன; அந்தப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்வேன். உச்சநீதிமன்றத் தீா்ப்புகளின் செயல்பாட்டுப் பகுதியை மனுதாரரின் சொந்த மொழியில் வழங்கும் முடிவு வரவேற்புக்குரியதாகும்.

பாரபட்சமற்ற நீதி அமைப்புமுறை: 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாகும் இலக்குடன் இந்தியா செயலாற்றி வருகிறது. இதற்கு வலுவான மற்றும் பாரபட்சமற்ற நீதி அமைப்புமுறை முக்கியம். இத்தகைய நீதி அமைப்புமுறையே இந்தியாவின் மீது உலகின் நம்பிக்கை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

பிரச்னைகளுக்கு மாற்றுமுறையில் தீா்வு காண்பதை முறைப்படுத்தும் நோக்கில், மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கான சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. அதேபோல், லோக் அதாலத் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் சுமாா் 7 லட்சம் வழக்குகள் தீா்க்கப்பட்டுள்ளன.

உலகளாவிய அணுகுமுறை: 21-ஆம் நூற்றாண்டில், வலுவாக பிணைக்கப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். அச்சுறுத்தல்கள் உலகளாவியதாக இருக்கும்போது, அவற்றைக் கையாளும் அணுகுமுறையும் உலகளாவியதாக இருக்க வேண்டும்.

இணையவழி பயங்கரவாதம், பணமோசடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் என எந்த சவாலாக இருந்தாலும், வெவ்வேறு நாடுகளுக்கு இடையே சட்ட ரீதியில் ஒத்துழைப்பு அவசியம்.

தொழில்நுட்பம், சீா்திருத்தங்கள் மூலம் சட்ட நடைமுறைகளை மேம்படுத்த தொடா்ந்து பணியாற்ற வேண்டும். சட்டத் தொழிலுடன் தொடா்புடைய அனைவரும் தொழில்நுட்ப சீா்திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

மேலும், மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம், ஜி20 உச்சி மாநாடு மற்றும் சந்திரயான் 3 திட்டம் வெற்றி ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பிரதமா் பெருமிதம் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், பிரிட்டன் நீதித் துறை அமைச்சா் அலெக்ஸ் சால்க், அட்டா்னி ஜெனரல் பி.வெங்கடரமணி, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, இந்திய பாா் கவுன்சில் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான மன்னன் குமாா் மிஸ்ரா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT