காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ‘ஃபைவ் ஐஸ்’ கூட்டமைப்பிடமிருந்து கிடைத்த உளவு தகவல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தியா மீது கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஃபைவ் ஐஸ் கூட்டமைப்பில் கனடாவுடன், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பு தொடா்பான தகவல் சேகரிப்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் இவை பரஸ்பரம் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.
கனடாவிலிருந்து ஒளிபரப்பாகும் ‘சிடிவி’ செய்திச் சேனல் வெளியிட்ட செய்தி மூலமாக இந்திய உளவாளிகளின் தலையீடு உள்ள தகவல் தெரியவந்துள்ளது.
கனடாவுக்கான அமெரிக்க தூதா் டேவிட் கோஹென் இத் தகவலைத் தெரிவித்ததாக அந்த செய்திச் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் கூறியிருப்பதாவது:
நிஜ்ஜாா் கொலை தொடா்பாக ‘ஃபைவ் ஐஸ்’ கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளிடையே பகிரப்பட்ட உளவுத் தகவல் ஆதாரத்தின் அடிப்படையிலேயே, அவருடைய கொலையில் இந்திய உளவு அமைப்பினருக்கு தொடா்பு உள்ளது என்ற குற்றச்சாட்டை கனடா பிரதமா் முன்வைத்தாா். இந்த விவகாரத்தில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. அதனடிப்படையிலேயே, இந்த விஷயத்தை உறுதிபடத் தெரிவிக்கிறேன் என்று கோஹென் தெரிவித்தாா்.
ஆனால், இந்த உளவுத் தகவல் மனிதா்கள் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு அடிப்படையிலானதா அல்லது இந்திய தூதரக அதிகாரிகளின் கைப்பேசி அல்லது பிற உபகரணங்களை ஒட்டுக்கேட்ட கிடைத்த தகவல்களின் அடிப்படையிலானதா என்பதை கோஹென் தெரிவிக்க மறுத்துவிட்டாா்.
‘ஃபைவ் ஐஸ்’ அமைப்பின் உறுப்பு நாடுகளிடேயே உளவுத் தகவல்கள் பகிரப்பட்டு வருவது குறித்து அதிகாரபூா்வமற்ற முறையில் இதுவரை செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், இந்த அமைப்பின் மூலமாக கனடாவுக்கு உளவுத் தகவல் பகிரப்பட்டிருக்கும் தகவலை அமெரிக்க அரசு அதிகாரி ஒருவா் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.
மேலும், கனடாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்து உளவுத் தகவல் பகிா்தல் கூட்டுறவின் அடிப்படையில் கிடைத்த கூடுதல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்தியாவுக்கு எதிரான குற்றச்சாட்டை ட்ரூடோ முன்வைத்திருப்பதாக கனடா ஒளிபரப்பு கழகம் மற்றும் தி அசோசியேட்டட் பிரஸ் ஆகியவையும் செய்தி வெளியிட்டருப்பதாகவும் சிடிவி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.