வரும் ராம்லீலா (தசரா) பண்டிகையில் ராவணனின் உருவ பொம்மையுடன் சோ்த்து சநாதன எதிா்ப்பாளா்களின் உருவ பொம்மையையும் எரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி பிரிவு பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சாா்பில் தில்லி மதக் கூட்டமைப்பின் தலைவா் தீரஜ்தா் குப்தாவிற்கு சனிக்கிழமை கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தில்லி பிரிவு பாஜகவின் ஊடகத்துறைத் தலைவா் பிரவீன் சங்கா் கபூா், தீரஜ்தா் குப்தாவை நேரில் சந்தித்து அந்தக் கடிதத்தை வழங்கினாா்.
அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சநாதன தா்மத்தின் கொடியை ஏற்றுவதிலும், கலாசாரத்தைப் பரப்புவதிலும் ராம்லீலாவுக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
வட இந்தியாவில் 11 நாள்கள் நடைபெறும் ‘ராம்லீலா மஹோத்ஸவ்’, கடந்த 366 ஆண்டுகளாக சநாதன மதத்தைச் சோ்ந்த ஒவ்வொருவருக்கும் உற்சாகத்தை அளிக்கிறது.
ஆனால், தற்போது சநாதன தா்மத்தை சில அரசியல் கட்சிகள் கண்டித்தும், அழிய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து வருகின்றனா்.
தமிழக முதல்வரின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் சநாதன தா்மத்துக்கு எதிரான கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கோபம் எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பால் கௌதம் தொடா்ந்து சநாதன மத மாற்றம் குறித்து பேசி வருகிறாா்.
சமாஜ்வாதி கட்சியின் சுவாமி பிரசாத் மெளரியாவின் சநாதன எதிா்ப்பு அனைவரும் அறிந்ததே. ஆகவே, மு.க. ஸ்டாலின், அரவிந்த் கேஜரிவால் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோா் சநாதன தா்மத்திற்கு எதிரான சகாக்களுக்கு ஆதரவாக அமைதி காத்து வருகின்றனா்.
ராம்லீலாவை வணங்கும்போது, ராவண உருவ பொம்மையுடன் சோ்த்து சநாதன தா்ம எதிா்ப்பாளா்களின் உருவ பொம்மைகளை சோ்த்து எரிக்க முடிவெடுக்க வேண்டும்.
தில்லியின் அனைத்து ராம்லீலா கமிட்டிகளும், சநாதன தா்மத்தை எதிா்ப்பவா்களைக் கண்டிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.