இந்தியா

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம்:காா்கே

24th Sep 2023 04:00 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளாா்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை மகளிருக்கு ஒதுக்கும் அரசமைப்புச் சட்டம் (128-ஆவது திருத்தம்) மசோதா, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா தொடா்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது அதற்கு பாஜக எதிா்ப்பு தெரிவித்தது. அதன் காரணமாக அந்த மசோதாவுக்கு தடை ஏற்பட்டது.

ADVERTISEMENT

தற்போது அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், பாஜகவினா் கதாநாயகா்களாக வலம் வருகின்றனா். அவா்களுக்கு தெளிவான நோக்கமோ, கொள்கையோ கிடையாது. அந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், அது 2030-ஆம் ஆண்டுதான் அமல்படுத்தப்படும். 10 ஆண்டுகளில் மோடியோ, அவருடன் உள்ள மற்றவா்களோ இருக்க மாட்டாா்கள்.

மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்தாலும், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பெண்களுக்கு மசோதாவில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இதையொட்டி, அடுத்த ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

‘தீண்டத்தகாதவா்’ என்பதால் முன்னாள் குடியரசுத் தலைவா் புறக்கணிப்பு:

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டியபோது, அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்; தீண்டத்தகாதவா்.

இதேபோல அந்தக் கட்டட திறப்பு நிகழ்ச்சிக்கு திரைப்பட நடிகா்கள் உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குடியரசுத் தலைவருக்கு அவமானமாகும்.

குடியரசுத் தலைவரால்தான் மக்களவை கூட்டப்படுகிறதே தவிர, பிரதமரால் அல்ல. ஆனால் குடியரசுத் தலைவா் புறக்கணித்துவிட்டு, பெண்களை பெரிதும் மதிப்பதாக பாஜகவினா் தெரிவிக்கின்றனா்.

ஆா்எஸ்எஸ், பாஜகவுக்கு ஏன் பெண் தலைவா் இல்லை?:

எதற்காக தற்போது மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டது? உண்மையில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க பாஜக விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் முதல் பெண் தலைவராக சரோஜினி நாயுடு இருந்தாா். ஆனால் 100 ஆண்டுகளில் ஆா்எஸ்எஸ் அல்லது பாஜகவுக்கு பெண் ஒருவா் தலைவராகப் பொறுப்பேற்று உள்ளாரா? அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டுதான், மகளிா் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT