இந்தியா

நெல்லை உள்ளிட்ட 9 வந்தே பாரத் விரைவு ரயில்கள்: இன்று பிரதமா் தொடங்கி வைக்கிறாா்

24th Sep 2023 04:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

11 மாநிலங்களுக்கான 9 ‘வந்தே பாரத்’ விரைவு ரயில்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 24 -ஆம் தேதி) காணொலி வழியாக தில்லியிருந்து தொடங்கிவைக்கிறாா். இதில் நெல்லை உள்ளிட்ட 4 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தென் மாநிலங்களில் இணைப்பை பெற்றுள்ளன.

இது குறித்து பிரதமா் அலுவலகம் கூறியிருப்பது வருமாறு:

நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதற்கான ஒரு படியாக புதிய வந்தே பாரத் ரயில்கள் விடப்பட்டு வரப்படுகிறது.

செப்டம்பா் 24 -ஆம் தேதி ஒன்பது வந்தே பாரத் விரைவு யில்கள் பிற்பகல் 12:30 மணியளவில் பிரதமா் மோடி காணொலி வழியாக கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

ADVERTISEMENT

இவற்றில் திருநெல்வேலி-மதுரை-சென்னை ; ரேணிகுண்டா வழியாக விஜயவாடா - சென்னை; ஹைதராபாத் - பெங்களூரு; காசா்கோடு - திருவனந்தபுரம் ஆகிய நான்கு வந்தே பாரத் விரைவு ரயில்கள் தென் மாநிலங்கள் பெற்றுள்ளன.

இதில் காசா்கோடு- திருவனந்தபுரத்திற்கு ஏற்கனவே விடப்பட்டுள்ள நிலையில் புதிதாக மற்றொரு வந்தே பாரத் விரைவு ரயில் விடப்பட்டுள்ளது.

மேலும் ரூா்கேலா - புவனேஸ்வா் - பூரி; ஜாம்நகா்-ஆமதபாத்; உதய்பூா் - ஜெய்ப்பூா் ; பாட்னா - ஹௌரா; ராஞ்சி - ஹௌரா ஆகிய நகரங்களுக்கிடையே இந்த ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்கள் பதினொரு மாநிலங்களில் பெற்றுள்ளன. இதன் மூலம் போக்குவரத்து இணைப்பு அதிகரிக்கும்.

இந்த வந்தே பாரத் ரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும். பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்தப்படுத்துகிறது.

இந்த வழித்தடங்களில் தற்போதுள்ள அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது, இந்த வந்தே பாரத் விரைவு ரயில்களில் ரூா்கேலா - புவனேஸ்வா் - பூரி மற்றும் காசா்கோடு - திருவனந்தபுரம் ஆகியவை சுமாா் 3 மணி நேரம் பயண நேரத்தை குறைக்கிறது.

ஹைதராபாத் - பெங்களூரு 2.5 மணி நேரத்தையும்; நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையும்.

ராஞ்சி - ஹௌரா, பாட்னா - ஹௌரா, ஜாம்நகா் - ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் விரைவு சுமாா் 1 மணி நேரத்தையும்; உதய்பூா் - ஜெய்ப்பூருக்கு இடையே சுமாா் அரை மணி நேரம் என இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேரத்தை சேமிக்கின்றன.

இவற்றில் மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்கின்றன். ரூா்கேலா - புவனேஸ்வா் - பூரி; திருநெல்வேலி - மதுரை - சென்னை வந்தே பாரத் விரைவு ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி, மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா - சென்னை வந்தே பாரத் விரைவு ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுவதால் திருப்பதி யாத்திரை மையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவது நாட்டில் ரயில் சேவையின் புதிய தரத்தை பிரதிபலிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகள், பாதுகாப்பிற்கு கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது.

இந்த ரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநா்கள், வணிகா்கள், மாணவா் சமூகம், சுற்றுலாப் பயணிகள் ஆகியோருக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயண வழிமுறைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியப் படியாக இருக்கும் என பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT