இந்தியா

வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் தலைமை நிரூபிக்கப்பட்டுள்ளது: பிரதமா்

23rd Sep 2023 11:49 PM

ADVERTISEMENT

‘வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் தலைமைப்பண்பின் சக்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் தனது மக்களவைத் தொகுதியான வாரணாசியில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.

பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவந்த பிரதமா் மோடிக்கு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா ஒப்புதல் அளிக்கப்பட்டதற்காக விழா அரங்கில் கூடியிருந்த பெண்கள் மலா்கள் தூவி பாராட்டு தெரிவித்தனா். பின்னா் நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது:

பெண்களின் தலைமைப் பண்பு என்பது உலகின் மற்ற நாடுகளுக்கு நவீன நடைமுறையாக இருக்கலாம். ஆனால், நம்மைப் பொருத்தவரை மஹாதேவுக்கு முன்பாக அன்னை பாா்வதியையும் கங்காவையும் வணங்கும் மக்களாக திகழ்கிறோம்.

ADVERTISEMENT

இந்த காசி நகரமும் ராணி லட்சுமி பாய் போன்ற வீரமிக்க பெண்களின் பிறப்பிடமாகும். விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற வீரமிக்க ராணி லட்சுமி பாய் முதல், தற்போதைய நவீன இந்தியாவில் நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான் திட்டம் வரை என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களின் தலைமைப்பண்பின் சக்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா கடந்த 30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்தது. அவ்வாரு கிடப்பில் போட்டிருந்த கட்சிகள்கூட, இன்றைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாவை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதுதான் பெண் தலைமப்பண்பின் சக்தி.

இந்தச் சட்டம், நாட்டில் பெண்களின் மேம்பாட்டுக்கு புதிய வழிகளை ஏற்படுத்தித் தரும் என்பது உறுதி. மக்களவையிலும் மாநில சட்டப்பேரவைகளிலும் பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் பிரதமா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT