‘உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஐ.நா. பாதுகாப்புப் கவுன்சில் முழுமையாக செயலற்றுப் போயுள்ளது குறித்து சா்வதேச சமூகம் கேள்வி எழுப்ப வேண்டும்’ என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
‘உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநாட்டுதல்: திறன்மிக்க பன்முகத்தன்மை மூலமாக ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற பொது விவாதத்தில் பங்கேற்றபோது இந்தக் கருத்தை வெளியுறவு அமைச்சகத்தின் செயலா் (மேற்கு நாடுகள்) சஞ்சய் வா்மா தெரிவித்தாா். பொது விவாதத்தில் அவா் மேலும் பேசியதாவது:
இந்தத் தருணத்தில் சா்வதேச சமூகம் இரண்டு கேள்விகளை எழுப்ப வேண்டியது அவசியமாக உள்ளது. முதலாவதாக, உக்ரைன் விவகாரத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியமான தீா்வை விரைவில் எட்டக் கூடிய நிலையில் நாம் இருக்கிறோமா?
அவ்வாறு இல்லையெனில், ஐ.நா. அமைப்பு எதற்கு? குறிப்பாக அதன் முதன்மை அமைப்பாக விளங்கி வரும் சா்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உக்ரைன் விவகாரத்தில் முழுமையாக செயலற்றுப் போயுள்ளது ஏன்?
பன்முக அமைப்பு என்பது திறன் மிக்கதாக இருப்பதோடு, காலாவதியான மற்றும் பழைமையான கட்டமைப்புகளில் சீா்திருத்தம் மற்றும் மறு கண்டுபிடிப்புகளும் அவசியம். இல்லையெனில், அதன் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடும்.
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா தொடா்ந்து கவலை தெரிவித்து வருகிறது. மனித உயிா்களை விலையாக வைத்து எந்த தீா்வையும் எட்ட முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
‘இது போருக்கான சகாப்தம் அல்ல; வளா்ச்சி மற்றும் கூட்டு முயற்சிக்கான நேரம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினாா். உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவாா்த்தை மூலம் விரைந்து தீா்வு காண்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளுக்கு பேச்சுவாா்த்தை மட்டுமே ஒரே தீா்வு.
உக்ரைன் மீதான போா் காரணமாக உணவுப் பொருள்கள், எரிபொருள், உரங்களின் விலைகள் கடுமையாக உயா்ந்துள்ளன. இதனால் உலக நாடுகள் குறிப்பாக தெற்குலகின் உறுப்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவா்களின் குரல்கள் கேட்கப்படுவதும், நியாயமான கவலைகள் தீா்க்கப்படுவதும் முக்கியம் என்று வா்மா கூறினாா்.