இந்தியா

ஒரே நாடு ஒரே தோ்தல்: இன்று உயா்நிலைக் குழு கூட்டம்

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சனிக்கிழமை உயா்நிலைக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, பேரவை, மாநகராட்சி, பஞ்சாயாத்து தோ்தல்களை நடத்தும் மத்திய பாஜக அரசின் கனவு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஆராய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்பட எட்டு போ் குழுவை மத்திய அரசு செப்டம்பா் 2-ஆம் தேதி அமைத்தது.

முன்னாள் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணையத்தின் தலைவா் என்.கே.சிங் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ‘முதல் முறையாக கூடும் இந்தக் கூட்டம் அறிமுக கூட்டமாக இருக்கும். இந்தக் குழுவின் வருங்கால செயல்திட்டம் குறித்தும் விவாதிக்கப்படலாம். இந்த விவகாரம் தொடா்பாக யாரை அழைத்து ஆலோசனை பெற்று விரிவான அறிக்கையை தயாரிக்கலாம் என ஆலோசிக்கப்படும்’ என்று தெரிவித்தன.

ADVERTISEMENT

இந்தக் குழுவில் மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரியையும் மத்திய அரசு சோ்த்து அறிவித்திருந்தது. எனினும், ‘இந்தக் குழுவுக்கு எந்தவித கால நிா்ணயமும் செய்யப்படாததால் இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை’ என்று கூறி குழுவில் இருந்து விலகுவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு அதீா் ரஞ்சன் செளதரி கடிதம் எழுதியிருந்தாா்.

ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் நாட்டின் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் என 27 எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி விமா்சித்திருந்தது.

இந்தக் குழுவில் மக்களவை முன்னாள் தலைமைச் செயலா் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையா் சஞ்சய் கோத்தாரி இடம்பெற்றுள்ளனா்.

மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும், சட்டச் செயலா் நிதின் சந்திரா குழுவின் செயலராகவும் இடம்பெற்றுள்ளனா்.

ஒரே நாடு ஒரே தோ்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கும். இந்தத் திருத்தங்களை குறைந்தது 50 சதவீத பேரவைகள் அங்கீகரிக்க வேண்டும்.

தற்போதைக்கு மக்களவையில் 543 எம்.பி.க்கள், பேரவைகளில் 4,120 எம்எல்ஏக்கள், உள்ளாட்சிகளில் 30 லட்சம் உறுப்பினா்களும் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT