புது தில்லி: ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய விவரங்கள் முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம், எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு கருத்துக் கூற வேண்டாம் என்று ஐ.நா. பாதுகாப்பு அவையில் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத்தில், பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பினார். இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. சபையின் இரண்டாவது கூட்டத்துக்கான முதன்மைச் செயலாளர் பேடல் கஹ்லோத், ஐக்கிய நாடுகள் சபையில் பேசியதாவது, பாகிஸ்தான், ஒரு தொடர் குற்றவாளியாக உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற, திரித்துக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த அவையில் திசைதிருப்ப முயற்சிக்கிறது. இதன் மூலம், தனது நாட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதிலிருந்து உலக நாடுகளின் பார்வையை பாகிஸ்தான் திசைதிருப்ப நினைக்கிறது. இதன் மூலம் தங்கள் நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மோசமான பதிவுகளை மறைக்கப் பார்க்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான், தனது நாட்டில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதிக்கு, காஷ்மீர் விவகாரம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் பொறுப்பு பிரதமர் கூறியிருந்ததற்கு, பதிலடி கொடுத்த பேடல் கஹ்லோத், நாங்கள் மீண்டும் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறோம், அதாவது ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பகுதி. எனவே, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை குறித்த விவகாரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். எனவே, எங்களது உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட்டு கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.
இதையும் படிக்க.. இந்த 7 உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடக் கூடாதா?
பாகிஸ்தானில், மிக மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்ற ஆதாரங்கள் மூலம் பாகிஸ்தானின் முகத்தை இந்தியா கிழித்தெறிந்திருக்கிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக. பாகிஸ்தான், உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை சுட்டிக்காட்டுவதற்கு முன்பு, முதலில், தங்களது நாட்டில் நடக்கும் விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் காட்டமாகக் கூறினார்.
பாகிஸ்தானில், ஆண்டுதோறும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்ள் கடத்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, பாகிஸ்தான் நாட்டினரை திருமணம் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள் என்று, அந்த நாட்டின் சொந்த மனித உரிமைகள் ஆணையமே அறிவித்திருப்பதையும் அந்த அவையில் இந்தியா சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.