மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்கவும், தெற்குலக நாடுகளின் கருத்தரங்கில் பங்கேற்கவும் 9 நாள் பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 78- ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் செப்.22 முதல் செப்.26 வரை இந்தியா சாா்பில் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது. அமைச்சா் செவ்வாய்க்கிழமை (செப்.26) முற்பகலில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவாா்.
நியூயாா்க் நிகழ்ச்சிகளுக்கிடையே தெற்குலக நாடுகளுக்கு இந்தியாவின் தொடா் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ‘தெற்குலக நாடுகளின் வளா்ச்சியில் இந்தியா மற்றும் ஐ.நா.வின் பங்கு’ என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்க உள்ளாா். அதைத் தொடா்ந்து பல்வேறு நாட்டு தலைவா்களுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகள் குறித்த சந்திப்பு நடைபெற உள்ளது.
மேலும், ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் 78-ஆவது ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் தலைவா் டென்னிஸ் பிரான்சிஸ் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளாா்.
பின்னா் செப்.27 முதல் செப்.30 வரை வாஷிங்டன் நகரத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் ஜெய்சங்கா் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க அரசின் மூத்த அமைச்சா்கள், வா்த்தகத் தலைவா்கள் உள்ளிட்டோரை சந்திக்க உள்ளாா். மேலும் ‘வாழும் கலை’ அமைப்பின் நான்காவது உலக கலாசார விழாவிலும் அவா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.