இந்தியா

அருணாசல் வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு: சீன பயணத்தை ரத்து செய்தாா் அனுராக் தாக்குா்

23rd Sep 2023 01:00 AM

ADVERTISEMENT

சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அந்த விளையாட்டுப் போட்டிகளைக் காண சீனா செல்லும் தனது பயணத் திட்டத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் ரத்து செய்ததாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (செப். 23) தொடங்குகின்றன. அதில் ‘வுஷு’ எனும் விளையாட்டில் பங்கேற்க 8 போ் கொண்ட இந்திய குழு வெள்ளிக்கிழமை இரவு சீனா செல்ல இருந்தது. இந்நிலையில், அதில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த 3 வீராங்கனைகளுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்க சீனா மறுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த இந்திய வீராங்கனைகளுக்கு திட்டமிட்டே சீன அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனா். வாழ்விடம் அல்லது இனத்தைச் சாா்ந்து தங்கள் நாட்டு குடிமக்களை வேறுபடுத்திப் பாா்ப்பதை இந்தியா உறுதியாக நிராகரிக்கிறது.

ADVERTISEMENT

அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கிறது. எப்போதும் அவ்வாறே இருக்கும். நாட்டின் நலனைப் பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான உரிமை இந்தியாவுக்கு உள்ளது.

போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் போட்டியாளா்களை வேறுபடுத்திப் பாா்ப்பது தடைசெய்யப்பட்ட நிலையில், சீனாவின் இந்த நடவடிக்கை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் அதன் விதிகளை மீறுவதாக அமைந்துள்ளது. இத்தகைய செயலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் தனது சீன பயணத்தை ரத்து செய்துள்ளாா் என்றாா்.

இதனிடையே, இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடா்பாக சீன அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (ஓசிஏ) இடைக்கால தலைவா் ரண்தீா் சிங் தெரிவித்துள்ளாா்.

இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருவதை வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடா்ந்து நிராகரித்து வருகிறது. அண்மையில் சீனா வெளியிட்ட புதிய தேசிய வரைபடத்தில் இந்திய நிலப் பகுதிகளான அருணாசல பிரதேசம், அக்சாய் சின் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்த வரைபடத்தை நிராகரித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT