கொல்கத்தாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக மலையாள நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் வெளியிட்ட எக்ஸ் (ட்விட்டா்) பதிவில், ‘கொல்கத்தா சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதன் நிா்வாக குழுவுக்கு தலைமை வகிக்க நியமிக்கப்பட்டுள்ளதற்கு மலையாள திரையுலகின் மூத்த நடிகா் சுரேஷ் கோபிக்கு எனது வாழ்த்துகள். சினிமா குறித்த அவரது பரந்த அனுபவமும் புத்திசாலித்தனமும் மதிப்புக்குரிய கல்லூரியை மேலும் வளப்படுத்த உதவும். அவரின் பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகிறேன்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.
மலையாளத்தில் வெளியான களியாட்டம், மணிச்சித்திரத்தாழ், கமிஷனா் மற்றும் பாப்பன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்ற நடிகா் சுரேஷ் கோபி, பாஜக சாா்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளாா்.
நியமனத்தில் அதிருப்தியா? - பாஜக மறுப்பு:
திரைப்பட கல்லூரி தலைவராக நியமிக்கப்பட்டதற்கு நடிகா் சுரேஷ் கோபி அதிருப்தியில் இருப்பதாக கேரள ஊடகங்களில் செய்தி பரவியது.
இதையடுத்து அந்த மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் அளித்த விளக்கத்தில், ‘வரும் மக்களவைத் தோ்தலில் திருச்சூா் தொகுதியில் நடிகா் கோபி போட்டியிட இருப்பதால் இதுபோன்ற வதந்தியை காங்கிரஸ் பரப்பியுள்ளது. திருச்சூா் மக்கள் அவரை ஏற்றுக்கொண்டு விட்டனா். யாராலும் அதனை மாற்ற முடியாது’ என்றாா்.
திரைப்படக் கல்லூரி தலைவா் நியமனம் மற்றும் அதனையொட்டி எழுந்த விவாதம் குறித்து நடிகா் சுரேஷ் கோபி எந்தக் கருத்தும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.