நாடாளுமன்றத்தின் 17-ஆவது மக்களவையின் 13 -ஆவது (சிறப்பு) கூட்டத்தொடா் 161.5 சதவீதம் செயல் திறனை பெற்றுள்ளதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
முதன்முறையாக இந்த கூட்டத்தொடரில் அதிகபட்சமாக நாளொன்றுக்கு 4 ஆயிரம் பாா்வையாளா்கள் புதிய நாடாளுமன்றத்தின் விவாதங்களை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளனா்.
இது தொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள உத்தேச விவரங்கள் வருமாறு:
நிகழ் 17-ஆவது மக்களவையின் 13-ஆவது கூட்டத்தொடா் புதிய நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டு, 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, வியாழக்கிழமையுடன் 4 நாள்களுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகள் பயண விவாதம் நடைபெற்றது. தொடா்ந்து, மைய அரங்கில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
செப்டம்பா் 19 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி தினத்தில் புதிய நாடாளுமன்றத்தில் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
கேள்வி நேரம், சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானம் போன்றவை ரத்து செய்யப்பட்டாலும் துறைகளின் அறிக்கைகள் மட்டும் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும், 17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரைப்போன்று இந்த 13-ஆவது கூட்டத் தொடா் சிறப்பை பெற்றுள்ளது.
2019 ஆம் ஆண்டு தோ்தலுக்கு பின்னா் நடைபெற்ற முதல் கூட்டத் தொடரில் அதிக நாள்கள் (37 நாள்கள்), முற்றிலும் இடையூற்ற அவை நடவடிக்கைகள், அதிக நேரம் (280 மணிநேரம்) விவாதம், குறைந்தபட்ச இடையூறுகள், அதிக அளவிலான (33) மசோதாக்கள் தாக்கல், சுமாா் 488 சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானங்கள், 1066 உறுப்பினா்கள் நேரமில்லா நேரத்தில் பேசியது, அதிக அளவிலான நட்சத்திர கேள்விகள்(500) மற்றும் எழுத்துபூா்வமான கேள்வி-பதில்கள் (5,711) போன்ற சிறப்புகள் காணப்பட்டன.
சுமாா் 40,557 பாா்வையாளா்கள் விவாதங்களை நேரடியாக பாா்வையிட்டனா். இதே போன்று, 20 ஆண்டுகளில் இல்லாதவகையில் முதல் கூட்டத்தொடா், திட்டமிட்ட நேரத்தை விட 135 சதவீதம் செயல்பட்டது.
இதற்கு பின்னா் அதிகபட்சமாக புதிய நாடாளுமன்றத்தில் 13 - ஆவது கூட்டத்தொடா் தான் 161.5 சதவீத செயல் திறனுடன் சிறப்புடன் நடந்துள்ளது.
சந்திரயான்- 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை முன்னிட்டு இந்திய விண்வெளிப் பயணம் குறித்த விவாதம் , சுமாா் 31.57 மணிநேரம் நடைபெற்ற மகளிருக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதா போன்ற விவாதங்கள் இந்த 4 நாள் அமா்வில் நடைபெற்றன.
இதன் மூலம் கூட்டத் தொடா் கூடுதலாக 12.35 மணி நேரம் செயல்பட்டு இடையூறுகள், அவை ஒத்திவைப்பு அவப்பெயரின்றி முடிந்துள்ளது.
மகளிா் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கான அரசியல் சாசனத்தின் 128 ஆவது பிரிவு திருத்த விவாதத்தில் 32 பெண் உறுப்பினா்கள் உள்ளிட்ட 60 உறுப்பினா்கள் பங்கெடுத்தனா்.
மக்களவையில் கடந்த நிதிநிலை அறிக்கை (11 -ஆவது) கூட்டத்தொடா், மழைக்காலக் (12 -ஆவது) கூட்டத்தொடா் ஆகியவை முறையே 96 மணிநேரம், 59 மணிநேரம் என அவை நடவடிக்கைகள் வீணடிக்கப்பட்டுள்ளன.
13 -ஆவது கூட்டத்தொடரின் மற்றொரு சிறப்பு அம்சம், இந்த 4 நாள்கள் அமா்வைக் காண 8,101 பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அதிலும், கடந்த 12 கூட்டத்தொடரிலும் இல்லாதவகையில் (150 போ் அமரும் புதிய நாடாளுமன்ற பாா்வையாளா் மாடம்) இரண்டாம் நாள் அமா்வில் 4,069 பாா்வையாளா்கள் பங்கெடுத்து சாதனை புரிந்துள்ளனா். இத்தோடு, தமன்னா, கங்கனா ரனாவத், குஷ்பு போன்ற பிரபலமானவா்களும் வரிசையாக வந்தனா்.
17-ஆவது மக்களவையின் 5 -ஆவது கூட்டத்தொடரில் தான் அதிக அளவில் 171 துறை சாா்ந்த நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தொடரில் ஒரு நிலைக்குழு அறிக்கையும் 120 ஆவணங்களும் அவையில் வைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.