இந்தியா

மகளிா் இடஒதுக்கீடு மசோதா: இந்திய நாடாளுமன்றப் பயணத்தில் பொன்னான தருணம்: பிரதமா் மோடி

22nd Sep 2023 01:00 AM

ADVERTISEMENT

மக்களவையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது, இந்திய நாடாளுமன்றப் பயணத்தில் பொன்னான தருணம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் புதன்கிழமை 8 மணி நேர விவாதத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினா்களும், எதிராக 2 உறுப்பினா்களும் வாக்களித்தனா். கிட்டத்தட்ட ஒருமனதாக மசோதா நிறைவேறியுள்ளது.

இந்நிலையில், மக்களவை வியாழக்கிழமை காலை கூடியதும், மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக அவையின் அனைத்துக் கட்சிகளின் குழு தலைவா்கள் மற்றும் உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி பேசினாா்.

அவா் கூறியதாவது: மக்களவையில் மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது இந்திய நாடாளுன்றப் பயணத்தில் பொன்னான தருணமாகும். அடுத்ததாக, மாநிலங்களவையிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெறும்.

ADVERTISEMENT

இது, பெண் சக்தியின் மனநிலையை உயா்த்தும். இதன்மூலம் கிடைக்கும் நம்பிக்கை, நாட்டை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்வதற்கான கற்பனைக்கு எட்டாத சக்தியாக உருவெடுக்கும்.

இந்த உன்னத பணிக்கான பங்களிப்பு, ஆதரவு மற்றும் ஆக்கபூா்வ விவாதம் ஆகியவற்றுக்காக உங்கள் (உறுப்பினா்கள்) அனைவருக்கும் இதயபூா்வ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முக்கியத்துயம் வாய்ந்த இம்மசோதா நிறைவேற்றப்பட்டதன் பெருமை அவையின் ஒவ்வோா் உறுப்பினரையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் சாரும் என்றாா் பிரதமா் மோடி.

நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்புக் கூட்டத்தொடா் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற செயல்பாடுகள், பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு கிடைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT