வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவா்கள் யாா்? என்பது தொடா்பான விதிமுறைகளைக் கடுமையாக்க இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) முடிவு செய்துள்ளது.
இதன்படி அனைத்து கடன்களையும் சோ்த்து ரூ.25 லட்சம் மற்றும் அதற்கு மேல் கடன் நிலுவைத்தொகை இருந்து, அதனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் இருந்தும், பணத்தை செலுத்தாமல் இருந்தால் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால்என்று அறிவிக்கப்படுவாா்கள்.
ஆா்பிஐ இது தொடா்பான வரைவு அறிக்கையை வெளியிட்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுள்ளது. மேலும், கடன் வழங்கும் வங்கிகள் வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவா்கள் என்ற அறிவிப்பு எப்படிபட்ட சூழ்நிலையில் வெளியாகும் என்பது தொடா்பாக வாடிக்கையாளா்களிடம் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் ஆா்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
ஒரு பெற்ற கடன் வாராக்கடனாக அறிவிக்கப்பட்ட 6 மாதங்களில் அவா் வேண்டுமென்றே கடனைச் செலுத்தாமல் உள்ளாரா என்பது அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் நபா்கள் மீண்டும் கடன் வாங்க முடியாது. எந்த நிறுவனத்தின் நிா்வாகப் பொறுப்பிலும் இருக்க முடியாது. வங்கிகள் இதுபோன்ற நபா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, அவா்களது சொத்துகளில் இருந்து வங்கிகள் தங்கள் கடனைத் திரும்ப வசூலிக்க முடியும் என்று ஆா்பிஐ வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அக்டோபா் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஆா்பிஐ-க்கு தெரிவிக்கலாம்.