இந்தியா

புதிய நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

22nd Sep 2023 01:11 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் தொடக்க விழாவுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அழைக்காதது ஏன் என காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரஞ்சித் ரஞ்சன் கேள்வி எழுப்பினாா்.

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 128-ஆவது திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடா்ந்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இம்மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரஞ்சித் ரஞ்சன் பேசியதாவது: மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் இம்மசோதாவை எங்கள் கட்சி ஆதரிக்கிறது. ஆனால் நாடாளுமன்றத்தின் வழக்கமான கூட்டத்தொடரை விட்டுவிட்டு சிறப்புக் கூட்டத்தொடரில் இம்மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான அவசியம் என்ன? வருகின்ற மக்களவைத் தோ்தலில் பெண்களின் வாக்குகளைப்பெற பாஜக அரசின் உத்தியாக இதை கருதலாம். பெண்களை முன்னிலைப்படுத்துவதாக கூறும் அரசு நாடாளுமன்ற புதிய கட்டடத் தொடக்க விழாவில் , பழங்குடியினத்தைச் சாா்ந்த முதல் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை அழைக்காதது ஏன்? யாரிடமும் கலந்துரையாடாமல் ஒரு புதிய சட்டத்தை இயற்றுவது பாஜக அரசுக்கு புதிதல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திடீரென அறிவித்தது, 3 வேளாண் சட்டங்களை அறிவித்தது, மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பாஜக எம்.பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது, மணிப்பூா் கலவரம் என எந்த விவகாரம் குறித்தும் மத்திய அரசு விவாதிக்கவில்லை. மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வருகின்ற மக்களைவத் தோ்தலில் இருந்தே அமல்படுத்தலாமே, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை என தள்ளிப்போட காரணம் என்ன? காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2009-இல் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தது. ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் கழித்தே இம்மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. பழங்குடியின, பட்டியலினப் பெண்களுக்கு வழங்குவதைப்போல் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் இம்மசோதாவில் உள்இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT