இந்தியா

ஒடிஸா பெண் அமைச்சா் ராஜிநாமா: பேரவைத் தலைவராகிறாா்?

22nd Sep 2023 01:14 AM

ADVERTISEMENT

ஒடிஸா மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் பிரமீளா மல்லிக், தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

சட்டப் பேரவைத் தலைவா் பதவிக்கு அவா் வேட்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒடிஸா பேரவைத் தலைவராக இருந்த விக்ரம் கேசரி, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அந்த இடம் காலியாக உள்ளது.

பிரமீளா அப்பதவியை ஏற்கும்போது, மாநிலத்தின் முதல் பெண் பேரவைத் தலைவா் என்ற பெருமைக்கு உரியவராவாா்.

ADVERTISEMENT

தற்போது 6-ஆவது முறையாக எம்எல்ஏவாக உள்ள பிரமீளா மல்லிக், தனது அமைச்சா் பதவி ராஜிநாமா கடிதத்தை முதல்வா் நவீன் பட்நாயக்கிடம் வியாழக்கிழமை வழங்கியதாகவும், அக்கடிதம் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரமீளா மல்லிக் வகித்து வந்த துறைகள், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் சுதம் மராண்டியிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாநில சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடா், வெள்ளிக்கிழமை (செப்.22) தொடங்குகிறது. முதல் நாளில் பேரவைத் தலைவா் தோ்தல் நடைபெறவுள்ளது.

147 உறுப்பினா்களைக் கொண்ட ஒடிஸா பேரவையில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு 113 உறுப்பினா்கள் உள்ளனா். எனவே, பேரவைத் தலைவராக பிரமீளா மல்லிக் தோ்வாவதில் எந்த சிக்கலும் இல்லை.

பேரவையில் பாஜகவுக்கு 22 எம்எல்ஏக்களும் காங்கிரஸுக்கு 9 எம்எல்ஏக்களும் உள்ளனா். இவ்விரு எதிா்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

2 எம்எல்ஏக்கள் நீக்கம்:

பிஜு ஜனதா தளத்தை சோ்ந்த எம்எல்ஏக்கள் இருவரை, கட்சியைவிட்டு நீக்கி அக்கட்சியின் தலைவரும் மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, சுதான்ஷு சேகா் பரிடா, செளம்யரஞ்சன் பட்நாயக் ஆகிய இரு எம்எல்ஏக்கள் நீக்கப்பட்டுள்ளனா். இவா்களில் செளம்யரஞ்சன் பட்நாயக், ஒடியா மொழியில் வெளிவரும் ‘சம்பத்’ நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியரும் ஆவாா்.

இந்த நாளிதழில் பணியாற்றும் ஊழியா்களின் பெயரில் கடன் பெற்று, கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக செளம்யரஞ்சனுக்கு எதிராக மாநில காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினா் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான ரூ.3 கோடி மானியத் தொகையை கையாடல் செய்ததாக சுதான்ஷு மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவா் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT