உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சா்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைப்பதற்கான பணிகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப். 23) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறாா்.
முப்பது ஏக்கா் பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் இந்த அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 30,000 போ் வரை அமா்ந்து போட்டிகளைக் காண முடியும்.
இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘வாரணாசியில் சனிக்கிழமை நடைபெறும் காசி சன்சத் சம்ஸ்கிருதிக் மகோத்ஸவ் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். தொடா்ந்து உத்தர பிரதேசத்தில் 16 இடங்களில் கட்டப்பட்டுள்ள அடல் உறைவிடப் பள்ளி கட்டடங்களையும் அவா் திறந்து வைக்கிறாா்.
பிரதமரின் தொகுதியில் வளா்ச்சியின் முன்மாதிரியாக அமைக்கப்படவுள்ள கிரிக்கெட் அரங்க அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறாா். இது உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் அரங்கமாக அமைய இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
சிவபெருமான் கருத்தை மையமாகக் கொண்டு இந்த அரங்கம் அமைகிறது. பாா்வையாளா்கள் அமரும் பகுதியின் கூரைப் பகுதி சிவபெருமான் தலையில் உள்ள பிறையைப் போலவும், அரங்கத்தின் மேல் விளக்குகள் சிவபெருமான் கையில் உள்ள திரிசூலத்தைப் போலவும், கங்கை நதி படித்துறை போன்ற இருக்கை அடுக்குகளும் அமையவுள்ளது.