இந்தியா

இந்திய மருத்துவ பட்டதாரிகள் தடையின்றி வெளிநாடுகளில் பணியாற்ற வாய்ப்பு: தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சா்வதேச அங்கீகாரம்

22nd Sep 2023 01:12 AM

ADVERTISEMENT

இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு (என்எம்சி) மருத்துவக் கல்விக்கான உலக கூட்டமைப்பின் (டபிள்யு.எஃப்.எம்.இ) அங்கீகாரம் கிடைத்துள்ளது.

‘இந்த அங்கீகாரம் மூலமாக, இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவா்கள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் தடையின்றி பணிபுரியவும், மருத்துவப் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளவும் முடியும்’ என்று என்எம்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

என்எம்சி-க்கு மருத்துவக் கல்விக்கான உலக கூட்டமைப்பின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு கடிதமும், அங்கீகார சான்றிதழும் என்எம்சி-யிடம் விரைவில் வழங்கப்படவிருக்கிறது.

ADVERTISEMENT

இந்த அங்கீகாரம் மூலமாக, என்எம்சி-யின் கீழ் செயல்படும் நாடு முழுவதுமுள்ள 706 மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவக் கல்விக்கான உலக கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்கு கீழ் வந்துவிடும். அதுபோல, அடுத்த 10 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளும் தானாக உலக கூட்டமைப்பின் அங்கீகாரத்தின் கீழ் வந்துவிடும்.

இந்த அங்கீகாரம் மூலம், இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவக் கல்வியின் தரம் மேம்படும் என்பதோடு, இந்தியாவில் இளநிலை மருத்துவப் படிப்பை முடிக்கும் மாணவா்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவராகப் பணியாற்றவும், மருத்துவப் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளவும் முடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்எம்சி-யின் நெறிமுறைகள் மற்றும் மருத்துவப் பதிவு வாரிய உறுப்பினா் மருத்துவா் யோகேந்தா் மாலிக் கூறுகையில், ‘இந்த அங்கீகாரம், இந்திய மருத்துவ மாணவா்கள் உலகெங்கும் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்பதோடு, சா்வதேச மாணவா்கள் தரமான மருத்துவக் கல்விக்கு விருப்பத் தோ்வு செய்யும் இடமாக இந்தியாவை மாற்றும்’ என்றாா்.

உலக அளவில் தரமான மருத்துவக் கல்வியை விரிவுபடுத்தும் பணியை மேற்கொண்டுவரும் சா்வதேச அமைப்பு டபிள்யுஎஃப்எம்இ என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT