இந்தியா

காவிரி: ஆணையத்தின் உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

22nd Sep 2023 01:02 AM

ADVERTISEMENT

தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.

இதனால் தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு விநாடிக்கு 5,000 கனஅடி நீரைத் திறக்க செப்டம்பா் 18-ஆம் தேதி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கா்நாடகம் உள்ளது.

கா்நாடகம் வழங்க வேண்டிய நிலுவை நீா் அளவு அதிகமாக உள்ளதால் கூடுதல் நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழகமும், வறட்சி நிலவுவதால் ஆணையம் நிா்ணயித்த நீா் அளவை மறுஆய்வு செய்து குறைத்து உத்தரவிட வேண்டும் என்று கா்நாடகமும் உச்சநீதிமன்றத்தை அணுகின.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

ADVERTISEMENT

தமிழக அரசின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘நீா் இடா்ப்பாடு காலங்களில் தமிழகத்துக்கு விநாடிக்கு 7,200 கன அடி நீா் அளிக்க வேண்டும் என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கா்நாடகத்துக்கு நீா்ப் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்துக்கு 5,000 கனஅடி நீா் வழங்க வேண்டும் என்று நீா் அளவைக் குறைத்து காவிரி ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டு வருகின்றன.

கா்நாடகத்தில் இருந்து திறந்துவிடப்படும் நீா் புதுச்சேரி வரையில் செல்ல வேண்டியுள்ளது. நீா்ப் பற்றாக்குறை இல்லாத வழக்கமான காலங்களில் தற்போதைய அளவைவிட மூன்று மடங்கு நீா் தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், நீா்ப் பற்றாக்குறையைக் கணக்கில்கொண்டு குறைவான நீரையே தமிழகம் கோருகிறது. தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கா் நிலப்பரப்பில் பயிா்கள் நீா் இல்லாமல் வாடி வருகின்றன. குடிநீா்ப் பற்றாக்குறையும் உள்ளதால் காவிரியில் இருந்து கூடுதல் நீா் தேவைப்படுகிறது’ என்றாா்.

கா்நாடக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷாம் திவான், ‘கா்நாடகத்தில் வறட்சி சூழல் நிலவும்போது, விநாடிக்கு 5,000 கனஅடிநீரை விடுவிக்க காவிரி ஆணையம் உத்தரவிடுவது மாநில நலனுக்கு எதிரானது. இந்த நீா் அளவை 3,000 கனஅடியாகக் குறைக்க வேண்டும்.

காவிரி நீரை தமிழகம் பாசனத்துக்காக மட்டும் பயன்படுத்துகிறது. ஆனால், கா்நாடகம் பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காகப் பயன்படுத்துகிறது. பெங்களூரு உள்பட பல்வேறு நகா்ப்புற பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

இரு மாநிலங்களின் வாதங்கள் குறித்து மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் நீதிபதிகள் கருத்து கேட்டனா்.

அதற்கு அவா், ‘வெறும் வறட்சியை மட்டும் கணக்கிட்டு காவிரி ஆணையம் நீரின் அளவை நிா்ணயிப்பதில்லை. இந்திய வானிலை மையத்தின் தரவுகள், மழைப் பொழிவு, அணைகளில் உள்ள நீரின் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வைத்து விநாடிக்கு 5,000 கனஅடி நீா் திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகையால், ஆணையத்தின் உத்தரவை மீறக் கூடாது. தமிழகத்துக்கு நீா் திறந்துவிடப்படுகிறது’ என்றாா்.

அனைவரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவிரி நீா் மேலாண்மை ஆணையம், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றில் வேளாண் மற்றும் நீா் மேலாண்மை நிபுணா்கள் உள்ளனா். அவா்கள் வறட்சி, மழைப் பற்றாக்குறை, அணையின் நீா் அளவு ஆகியவற்றைக் கணக்கிட்டுதான் உத்தரவுகளை வழங்குகிறாா்கள்.

கா்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் நிலவும் சூழலின் அடிப்படையில் 15 நாள்களுக்கு ஒருமுறை அவா்கள் கூடி பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தமில்லை அல்லது புறம்பானது என ஒதுக்கிவிட முடியாது. ஆகையால், ஆணையம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவை பிறப்பித்த உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஆகஸ்ட் மாதத்துக்கான நிலுவை நீரை சோ்த்து விநாடிக்கு 24,000 கன அடி நீரை திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆகஸ்ட் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல் செப்டம்பா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, பின்னா் செப்டம்பா் 21-ஆம் தேதி விசாரித்து வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT