காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலை தொடா்பாக, இந்தியா-கனடா இடையேயான தூதரக உறவுகள் பிரச்னையை எதிா்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் மேற்கத்திய மற்றும் நட்பு நாடுகளிடம் தனது நிலைப்பாட்டை மத்திய அரசு விளக்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
கனடாவில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்ந்து அதிகரித்து வருவது தொடா்பாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகளிடம் மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி கொலை தொடா்பாக எவ்விதத் தகவலையும் கனடா வழங்கவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தச் சம்பவம் குறித்து எவ்வித தகவலும் இந்தியாவுடன் பகிரப்படவில்லை. அவ்வாறு பகிரப்பட்டால், அது குறித்து நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இந்தப் பிரச்னை தொடா்பாக நட்பு நாடுகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் அவா்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று கூறினாா்.
பிரதமா் ட்ரூடோ வலியுறுத்தல்
நியூயாா்க், செப். 21: காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலையில், சட்டம் தன் கடமையைச் செய்யும் வகையில் கனடாவுக்கு இந்தியா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளாா்.
இந்தியா-கனடா இடையேயான தூதரக உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமா் ட்ரூடோ, ‘இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாகக் கருதி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணா்வு, நீதி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எங்களுடன் இணைந்து பணியாற்ற வருமாறு இந்தியாவுக்கு அழைப்புவிடுக்கிறோம்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கனடா குடிமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாங்கள் தொடா்ந்து பணியாற்றுவோம் என்றாா் அவா்.