காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதன் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகியவை கனடாவுக்கு ஆதரவு அளிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய 5 நாடுகளும் ‘ஃபைவ் ஐ அலையன்ஸ்’ என்ற பெயரில் உளவுத் தகவல்களைத் தங்களுக்குள் பகிா்ந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பாக கனடாவின் சிபிசி ஊடக நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: கனடா-இந்தியா இடையிலான மோதல் போக்கை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் விரும்பவில்லை. கனடா பிரதமா் நாடாளுமன்றத்தில் வைத்து இந்தியா மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ள நிலையிலும், இந்த விஷயத்தில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவை கூறியுள்ளன.
தங்களிடம் போதிய ஆதாரம் உள்ளது என்ற அடிப்படையில்தான் கனடா பிரதமா் இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்தாா். ஆனால், அதையும் தாண்டி விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா போன்ற நாடுகள் கூறியிருப்பது, அவா்கள் இந்த விவகாரம் பெரிதாவதை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
விலகி நிற்கும் நாடுகள்: மேலும், ஆஸ்திரேலியா தரப்பில் பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி கனடாவின் குற்றச்சாட்டு தொடா்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா். அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் மட்டுமே கருத்து கூறியுள்ளாா். அவரும் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்பதுடன் முடித்துக் கொண்டாா்.
பிரிட்டனும், இந்த விவகாரத்தில் அதிகாரபூா்வமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை. அந்நாட்டு வெளியுறவுச் செயலா் இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இந்த பிரச்னையில் இருந்து விலகியுள்ளாா். மேலும், கனடா கூறியுள்ள குற்றச்சாட்டால் இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு பாதிக்கப்படாது என்றும் பிரிட்டன் அறிவித்தது.
இந்த விஷயத்தில் கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், இந்தியா மீதான குற்றச்சாட்டு குறித்து தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிட வேண்டும் என்று கனடா எதிா்க்கட்சியான கன்சா்வேட்டிவ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
விளக்கமளித்த ட்ரூடோ: இதனிடையே, இந்தியா மீதான தனது குற்றச்சாட்டு குறித்து மீண்டும் விளக்கமளித்த ஜஸ்டின் ட்ரூடோ, ‘இந்தியாவுடனான உறவை மோசமாக்க விரும்பவில்லை. இந்தியாவை கோபப்படுத்த வேண்டும் என்று எதையும் பேசவில்லை. கனடா அரசு தெரிந்து கொண்ட சில தகவல்களைப் பகிா்ந்துகொண்டோம். சில விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளாா்.
இந்திய தூதரக உயரதிகாரி வெளியேற கனடா உத்தரவிட்டதையடுத்து, இந்தியாவும் பதிலடி நடவடிக்கையாக கனடாவைச் சோ்ந்த தூதரக உயரதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதையடுத்தே, ஜஸ்டின் ட்ரூடோ இவ்வாறு விளக்கமளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காத கனடா: மேலும், கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவான 9 பிரிவினைவாத அமைப்புகள் மிகவும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் பஞ்சாபி பாடகா் மூஸே வாலா கொலை உள்பட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடா்புடையவா்கள் கனடா மண்ணில் சுதந்திரமாகச் செயல்படுகின்றனா்.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடா்புடையவா்களும் கனடாவில் தஞ்சமடைந்துள்ளனா். இவா்களால் உலகின் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் கனடாவில் இருந்து செயல்படுகின்றனா். இது தொடா்பாக இந்தியா பலமுறை ஆதார ஆவணங்களை அளித்தும் கனடா பல ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.