புது தில்லி: இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில், கனடா நாட்டில் விசா வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பது ஏன் என்பது குறித்து வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, தீவிரவாதிகளின் புகலிடமாக திகழ்கிறது கனடா என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், அவர் பேசுகையில், குற்றவாளிகளின் புகலிடமாக கனடா மாறிவருகிறது. இந்தியாவுக்கு எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
கனடாவில் இருந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர் பற்றி இந்திய அரசு சார்பில் ஆதாரங்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
கனடா நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாகவே இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கனடா தனது நற்பெயரை காக்க வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து கனடா செல்லும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு நேற்று பயண எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கனடாவிலிருந்து வருவோருக்கு விசா வழங்குவதை இந்திய தூதரகம் இன்று நிறுத்தியிருக்கிறது.
இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் (45) கனடாவில் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசு ஏஜெண்டுகளின் தலையீடு உள்ளதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதைத் தொடா்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி வெளியேறுமாறும் கனடா அரசு உத்தரவிட்டது.
இதையும் படிக்க.. கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி: அடுத்து நடந்த ட்விஸ்ட்!
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்திய அரசு, பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயா் அதிகாரி வெளியேற உத்தரவிட்டது.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது தீவிரமடைந்துள்ளது.