வணிகத்தை மேம்படுத்தும் மற்றும் பயனாளர்களை அசத்தும் வகையில் புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப் செயலி அறிமுகப்படுத்துகிறது.
விரைவான தொடர்பு, பணம் செலுத்துதல், நம்பத்தன்மையை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், வாட்ஸ்ஆப் ஃப்ளோ, பேமென்ட்ஸ், வெரிஃபிகேஷன் ஆகிய அம்சங்கள் அறிமுகமாகின்றன.
இந்தியாவுக்கு வாட்ஸ்ஆப் ஒன்றும் புதிதல்ல. லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள். சொந்த மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான செயலிகளில் முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், அதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தும் வகையில் மூன்று புதிய அம்சங்கள் வரவிருக்கின்றன.
மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மெட்டா நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், பயன்படுத்துவதில் எளிமை மற்றும் புதிய டூல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், வணிகத்தில், தங்களது வாடிக்கையாளர்களை எளிதாக இணைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்றார்.
இதில், வாட்ஸ்ஆப் ஃப்ளோ என்ற புதிய டூல் மூலம், வாட்ஸ் ஆப் சேட் மூலமே, பல வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள இயலும். விமான டிக்கெட் முன்பதிவு, உணவை ஆர்டர் செய்வது போன்றவற்றை வெறும் சாட் திரெட் மூலமே வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் வழங்க முடியும் என்றும் ஸுக்கர்பெர்க் தெரிவித்தார்.
பேமெண்ட்ஸ்.. வாட்ஸ் ஆப் செயலி மூலமாகவே பணப்பரிமாற்றம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் சேட்டில் இருந்தே, ஒரு பயனாளர், யாருக்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பும் வசதி இது.
மெட்டா வெரிஃபிகேஷன்..
மெட்டா வெரிஃபிகேஷன் முத்திரையானது, வணிகப் பயன்பாட்டுக்கான வாட்ஸ்ஆப்களுக்கு ஒரு முத்திரை வழங்கும். இவை வணிக நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அமையவிருக்கிறது. இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறவும், பாதுகாப்பு அளிக்கவும் வகை செய்யும்.
ஒவ்வொரு வாரமும் வாட்ஸ்ஆப், மெசேஞ்ஜர், இன்ஸ்டாகிராம் மூலம் நேரடியாக 100 கோடி வணிக மெசேஜ்கள் அனுப்பப்படுகின்றன.
80 சதவீத இந்திய பயனாளர்கள், வணிகம் தொடர்பான பணிகளுக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, வணிகப் பயன்பாட்டுக்கான கூடுதல் வசதிகளை வாட்ஸ்ஆப் செய்துவருகிறது.