மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடனடியாக அமலுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற முதல் அமர்விலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று தாக்கல் செய்தார்.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய அர்ஜூன்ராம் மெஹ்வால், மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கும். தற்போது கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா, மக்களவையின் மூன்று பதவிக்காலங்களுக்குப் பொருந்தும் என்று தெரிவித்தார்.
மகளிருக்கான இடஒதுக்கீட்டில் 3-ல் ஒரு பங்கு பட்டியலின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., தொகுதி ஒதுக்கீடு மகளிர் ஒதுக்கீட்டால் பாதிக்கப்படாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பின் மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்த பிறகே இந்த மசோதா அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மொத்தமுள்ள சட்டப்பேரவைகளில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் சட்டப்பேரவைகள் ஒப்புதல் அளித்த பிறகே மசோதா அமலுக்கு வரும்.
இந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது எடுக்கப்படும் என்றும், மசோதா அமலுக்கு வரும் தேதி குறிப்பிடாமலேயே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல்
இதற்கிடையே 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில், 2026ஆம் ஆண்டுதான் கணக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம், அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வருவதற்காக வாய்ப்பு குறைவு என்றே தெரிகின்றது.