இந்தியா

மகளிர் இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்கு முன்பே கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!

19th Sep 2023 05:19 PM

ADVERTISEMENT

நாடாளுமன்ற மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஒரு மாதத்துக்கு முன்பே உச்சநீதிமன்றம் இந்த மசோதா குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. 

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நேற்று(செப். 18) தொடங்கிய நிலையில் நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாடாளுமன்ற அலுவலகள் இன்று(செப். 19) புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டடத்தின் மக்களவையில் முதல் மசோதாவாக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

1990களில் இருந்து பல்வேறு அரசுகளால் முயன்றும் நிறைவேற்ற முடியாத  மகளிர் இட ஒதுக்கீடு இன்று பாஜக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க | ஷவர்மாவில் என்ன ஆபத்து?

இந்நிலையில் பாஜக அரசு இந்த மசோதாவை கையில் எடுக்க உச்சநீதிமன்றம் காரணம் என்று சொல்லப்படுகிறது. 

ஏனெனில், ஒரு மாதத்திற்கு முன்பே உச்சநீதிமன்றம் இந்த மசோதா குறித்து மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

"மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? ஏன் பதில் மனு தாக்கல் செய்யவில்லை?  மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறீர்களா? இல்லையா? இது மிகவும் முக்கியமான பிரச்னை" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.என். பட்டி அமர்வு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. மேலும், இதற்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வருகிற அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது. 

மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி 2021 ஆம் ஆண்டு இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பு (NFIW) உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க |  மகளிர் இடஒதுக்கீடு மசோதா: உடனடியாக அமலுக்கு வருவதில் சிக்கல்?

ADVERTISEMENT
ADVERTISEMENT