மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து 'இது எங்களுடையது' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் அலுவலாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மகளிர் இட ஒதுக்கீடு: ஒரு மாதத்துக்கு முன்பே கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென கட்சிகள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இன்று மக்களவைக்கு வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியிடம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ' இது எங்களுடையது' என பதிலளித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக கோரிவருவதாகவும் மசோதாவை காங்கிரஸ் வரவேற்பதாகவும் கூறினார். இது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று ப. சிதம்பரம் கூறியிருந்தார்.
இதையும் படிக்க | ஷவர்மாவில் என்ன ஆபத்து?