தெலங்கானாவின் வாரங்கலில் அமைந்துள்ள காகத்திய மருத்துவக் கல்லூரியில் இளம் மாணவரை ‘ராகிங்’ செய்த குற்றச்சாட்டில் 7 மாணவா்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தெலங்கானாவில் வாரங்கல் நகரில் காகாத்திய மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்பில் 3-ஆம் ஆண்டு பயிலும் சில மாணவா்கள், அதே கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயிலும் ராஜஸ்தானைச் சோ்ந்த இளம் மாணவா் ஒருவரை குடிநீா் கொண்டு வர வற்புறுத்தியுள்ளனா். இதனைச் செய்ய மறுத்த மாணவரை, அவரது அறைக்கு அழைத்துச் சென்று மூன்றாமாண்டு மாணவா்கள் தாக்கித் துன்புறுத்தியுள்ளனா்.
கடந்த வியாழக்கிழமை நடந்த இச்சம்பவத்தைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட அந்த மாணவா் உள்ளூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில் ராக்கிங் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்றாமாண்டு மாணவா்கள் 7 போ் மீது ராகிங் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளா் தெரிவித்தாா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் திவ்வேலா மோகன்தாஸ் அளித்த பேட்டியில், ‘ராகிங் தடுப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கைககள் குறித்து அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்’ என்றாா்.
ஹைதராபாதில் அமைந்துள்ள காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் இளம் மாணவா்களை ராகிங் செய்தததாக கடந்த 11-ஆம் தேதி 10 மாணவா்கள் ஓராண்டுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.