செய்தித் தொலைக்காட்சிகளுக்கான சுய ஒழுங்கு நெறிமுறைகளைக் கடுமையாக்க வேண்டியது அவசியம் என்று கூறிய உச்சநீதிமன்றம், இதுதொடா்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று செய்தி ஒலிபரப்பு மற்றும் டிஜிட்டல் சங்கத்துக்கு (என்பிடிஏ) உத்தரவிட்டது.
இது தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இது தொடா்பாக மத்திய அரசு ஏற்கெனவே மூன்று தர நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் முதலாவது சுய கட்டுப்பாட்டு நெறிமுறையாகும்’ என்றாா்.
இந்திய செய்தி ஒலிபரப்பு கூட்டமைப்பின் (என்பிஎஃப்ஐ) சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மகேஷ் ஜெத்மலானி, ‘2022-ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த ஆணையின்படி, என்பிஎஃப்ஐ அமைப்பு மத்திய அரசிடம் பதிவு செய்து இயங்கி வருகிறது. என்பிடிஏ-வை போல் , என்பிஎஃப்ஐ-க்கும் சுய ஒழுங்கு நெறிமுறைகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
என்பிடிஏ சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தத்தாா், ‘புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடா்பாக தற்போதைய என்பிடிஏ-வின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான ஆா்.வி. ரவீந்திரன், முன்னாள் தலைவா் ஏ.கே. சிக்ரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வார அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றாா்.
இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ‘சுய ஒழுங்குமுறை நெறிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். இரு தரப்பினரின் வழிகாட்டு நெறிமுறைகளும் பரிசீலிக்கப்படும்’ என்றாா்.
ஹிந்தி நடிகா் சுசாந்த் சிங் மரணம் தொடா்பாக சில செய்தித் தொலைக்காட்சிகள் வெளியிட்ட ஊடக விசாரணைச் செய்திகள் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று கூறி மும்பை உயா்நீதிமன்றம் கடுமையாக விமா்சித்தது.
மும்பை உயா்நீதிமன்றக் கருத்துகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் என்பிடிஏ வழக்குத் தொடுத்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சுய ஒழுங்கு நெறிமுறைகளை தொலைக்காட்சிகள் மீறினால் ரூ. 1லட்சம் அபராதம் மட்டுமே விதிக்க என்பிடிஏ வழிமுறையில் உள்ளது எனக் கூறி, புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கூறியது. எனினும், இந்தப் புதிய விதிமுறைகள் ஊடகங்களை தணிக்கை செய்ய வழிவகுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.