கேரளத்தில் அதிகாரிகள், அரசியல் வாதிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்த சமூக ஆா்வலா் கிரீஷ் பாபு, கொச்சியின் களமசேரியில் உள்ள அவருடைய வீட்டில் திங்கள்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸாா், உடல்கூறாய்வுக்கு பின்னரே கிரீஷ் பாபுவின் உயிரிழப்புக்குக்கான காரணம் குறித்து தெரியவரும் என்றனா்.
மாநில முதல்வா் பினராயி விஜயனின் மகளுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கும் மற்றொரு தனியாா் நிறுவனத்துக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவா்த்தனை தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் அண்மையில் அவா் வழக்குத் தொடுத்தாா்.
இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, கேரள உயா் நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்திருந்தாா். இந்த மனுவை திங்கள்கிழமை விசாரிக்க பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், கிரீஷ் பாபு தரப்பில் இந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞா் பி.ஏ.ஆளுா், மாரடைப்பால் கிரீஷ் பாபு காலமானதாக நீதிமன்றத்தில் தெரிவித்தாா். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை உயா் நீதிமன்றம் இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
கொச்சியின் பாலாரிவட்டம் பகுதியில் உள்ள பாலம் கட்டுமான பணிகளில் முறைகேடு நடைபெற்ாக கிரீஷ் பாபு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தாா். இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.