காசநோயை 2025-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு நிா்ணயித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக உலகத்துக்கே இந்தியா முன்னுதாரணமாக திகழ்வதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
உத்தம்பூா் மக்களவைத் தொகுதியில் ஸ்ரீ மாதா வைஷ்ணோதேவி நாராயணா மருத்துவ உதவி மையத்தின் காசநோய் ஒழிப்பு விரைவு ஊா்தி சேவையை மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவத்தாா். பின்னா் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ உபகரணங்களை அவா் வழங்கினாா். அப்போது அவா் பேசியது:
காசநோயை ஒழிப்பதில் அரசு மற்றும் தனியாா் துறைகள் இணைந்து பணியாற்றுவது மிக அவசியமானது. இந்நோயை ஒழிப்பதில் உயிரி தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியாா் துறையின் பங்களிப்புடன் காச நோயாளிகளைக் கண்டறிதல், மத்திய அரசின் ‘நிக்ஷய் போஜன்’ திட்டம் முதலியவை இந்தியாவில் இந்நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியை நோயாளிகளுக்கு உகந்ததாக மாற்றியுள்ளது.
இதன்மூலம் 2025-ஆம் ஆண்டுக்குள் காசநோய் ஒழிக்கும் முயற்சியில் உலகுக்கே இந்தியா முன்னுதாரணமாக திகழும் என்றாா் அவா்.