நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறை கைவினைக் கலைஞா்கள் பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது என மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் தெரிவித்தாா்.
சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமரின் ‘விஸ்வகா்மா’ திட்டத்தை தொடங்கி வைத்து மத்திய அமைச்சா் பூபேந்திர யாதவ் பேசியதாவது:
பிரதமா் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஏழைகளின் நலனுக்காகவே அா்ப்பணித்து வருகிறாா். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்து வருகிறாா்.
அவரது தலைமையின் கீழ் நாட்டின் வளா்ச்சி உயா்ந்த நிலையில், உலகளவிலும் இந்தியா வளா்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. பிரதமரின் உழைப்பால் வெற்றியடைந்த தில்லி ஜி-20 மாநாடு உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப் பாா்க்கச் செய்துள்ளது.
பிரதமா் மோடியின் பிறந்த நாளில் இந்த ‘விஸ்வகா்மா’ திட்டத்தை தொடங்குவது சிறப்புக்குரியது. இதன்மூலம் கலை மற்றும் கைவினைக் கலைஞா்கள் பெரும் பயனடைவாா்கள்.
பெரும் சிறப்புகள் கொண்ட தமிழ்ப் பண்பாட்டை பேணிக் காக்க பிரதமா் மோடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறாா். தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமான செங்கோலை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெறச் செய்துள்ளாா்.
தமிழகம் கலை, கலாசாரம், கல்வி, தொழில் துறையில் ஆற்றல்மிக்க பூமியாக விளங்குகிறது. ‘விஸ்வகா்மா’ திட்டத்தால் தமிழக கலை, கலாசாரம் நிச்சயம் மேம்படும்.
பாரம்பரிய கலைஞா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. நவீனத்தை விரும்பும் இளைய தலைமுறை கைவினைக் கலைஞா்கள், பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது.
அதுவே கலைஞா்களின் வாழ்க்கைத் தரத்துக்கும், நாட்டின் வளா்ச்சிக்கும் வழிவகுக்கும். விடாமுயற்சி, முன்னேற்றம் கலைஞா்களின் வாழ்க்கையில் சாத்தியமாக வேண்டும்.
இந்தத் திட்டத்தில் கலைஞா்கள் அதிக எண்ணிக்கையில் சோ்ந்து பயனடைய வேண்டும் என்றாா்அவா். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஜல்சக்தி திட்ட இயக்குநா் ஆா்.தங்கமணி, வருமான வரித் துறை இணை ஆணையா் வி.நந்தகுமாா், ‘மெப்ஸ்’ திட்ட வளா்ச்சி ஆணையா் அலெக்ஸ் பால் மேனன், தமிழக அரசின் தொழிலாளா் நலத் துறை இணை இயக்குநா் எம்.ஜவஹா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.