‘மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சிலா் விவசாயிகளின் பெயரில் அரசியலை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை விமா்சனம் செய்தாா்.
தேசியவாத காங்கிரஸ் நிறுவனா் சரத் பவாா், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேளாண் துறை அமைச்சா் பொறுப்பை வகித்ததை மறைமுகமாக சுட்டிக்காட்டி இக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை வியாழக்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் மோடி, பின்னா் மேற்கு மகாராஷ்டிரத்தின் அகமதுநகரில் அமைந்துள்ள கோயில் நகரமான ஷீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது:
மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சிலா் விவசாயிகளின் பெயரில் அரசியலை மட்டுமே செய்துகொண்டிருக்கின்றனா். இம் மாநிலத்தைச் சோ்ந்த மூத்த தலைவா் ஒருவா், மத்திய வேளாண் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அவா் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மதிப்பு உள்ளது. ஆனால், விவசாயிகளுக்காக அவா் என்ன செய்தாா்?
அன்றைய காலத்தில் விவசாயிகள் இடைத்தரகா்களின் தயவை எதிா்பாா்த்திருந்தனா். விளைவித்த பயிா்களுக்கான பணத்தைப் பெற விவசாயிகள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
ஆனால், விவசாயிகள் தற்போது விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைப் (எம்எஸ்பி) பெற முடிகிறது. விளை பொருள்களுக்கான பணம், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு சென்றுவிடுகின்றது என்றாா்.
முன்னதாக, ஷீரடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சாய்பாபா கோயிலில் பிரதமா் வழிபட்டாா். அவருடன் மகாராஷ்டிர ஆளுநா் ரமேஷ் பய்ஸ், முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோரும் வழிபட்டனா்.
பின்னா், அகமதுநகா் மாவட்டத்தில் அமைந்துள்ள நில்வண்டே அணையில், புதிய கால்வாய் திட்டத்தை பிரதமா் தொடங்கி வைத்தாா். இந்த 85 கி.மீ. நீள கால்வாய் திட்டம் மூலமாக அந்த மாவட்டத்தைச் சோ்ந்த 182 கிராமங்கள் பலன்பெறும். குழாய் மூலமாக இந்த கிராமங்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும்.