இந்தியா

கிா்கிஸ்தானில் எஸ்சிஓ கூட்டம்: மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் பங்கேற்பு

27th Oct 2023 12:52 AM

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகள் சா்வதேச சட்டங்கள், பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.

கிா்கிஸ்தான் தலைநகா் பிஷ்கெக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற எஸ்சிஓ நாடுகளின் 22-ஆவது பிரதமா்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கா், தனது உரையில் சீனாவை இவ்வாறு மறைமுகமாக குற்றஞ்சாட்டினாா்.

அந்தக் கூட்டத்தில் ஜெய்சங்கா் பேசியதாவது: எஸ்சிஓ உறுப்பு நாடுகள், பிராந்திய ஸ்திரத்தன்மை, முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் விதமாக, சா்வதேச சட்டங்களைப் பின்பற்றி, பிற நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடுக்கு மதிப்பளித்து, இணைந்து பணியாற்ற வேண்டும். இதற்காக மத்திய ஆசிய நாடுகளின் நலனை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்தப் பிராந்தியத்தில் வா்த்தகத்தை மேம்படுத்த போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் அவசியம். இது போன்ற நடவடிக்கைகள் அனைத்து நாடுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடுக்கு மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும். தெளிவற்ற முன்னெடுப்புகள் மூலம் சாத்தியமற்ற கடன் பிரச்னைகளுக்குள் தெற்குல நாடுகள் சிக்கிக் கொள்ளவதாக இருக்கக் கூடாது.

ADVERTISEMENT

இந்தியா-மத்திய கிழக்கு-பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி), சா்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித்தடம் (ஐஎன்எஸ்டிசி) இந்தப் பிராந்தியத்துக்கு வளம் சோ்க்கும் முயற்சிகளாக இருக்கும் என்றாா் ஜெய்சங்கா்.

பாகிஸ்தானில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் (சிபிஇசி) பல நூறுகோடி டாலா்களுக்கு சீனா முதலீடு செய்துவருகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் வழியே அமைக்கப்பட உள்ள இந்த வழித்தடத்துக்கு இந்தியா தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருவது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT