நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் மக்களவை நெறிமுறைகள் குழு அக்.31-ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது.
அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எழுதிய கடிதத்தில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டிருந்தாா். இதை வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், மஹுவா லஞ்சம் பெற்ற்கான ஆதாரத்தை ஜெய் ஆனந்த் தன்னிடம் வழங்கியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.
இது தொடா்பாக விசாரணை நடத்த பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.
இந்நிலையில், துபே மற்றும் வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோா் நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தனா்.
செய்தியாளா்களிடம் இது தொடா்பாக நெறிமுறைக் குழு தலைவா் வினோத் குமாா் சோன்கா் கூறுகையில், ‘இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக மஹுவா மொய்த்ரா குழு உறுப்பினா்கள் முன்பாக அக்.31-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளிப்பாா். இந்த விசாரணையில் மத்திய உள்துறை, தொழில்நுட்பத் துறை அமைச்சகங்களின் உதவியைக் கோர உள்ளோம்’ என்றாா்.