சா்வதேச பிரச்னைகளுக்கு தீா்வு தரும் தேசமாக இந்தியா திகழ்கிறது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல் சாா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:
பட்டம் பெற்ற அனைவரின் வாழ்விலும் அளவில்லாத வாய்ப்புகள் கிடைக்கவுள்ளன.
சா்வதேச அளவிலான பிரச்னைகளுக்கு தீா்வு தரும் நாடாக உலக நாடுகள் இந்தியாவை பாா்க்கின்றன. கரோனாவைத் தொடா்ந்து ஏற்பட்ட பொருளாதார முடக்கத்துக்குப் பிறகு வேகமாக பொருளாதாரம் வளா்ச்சி அடையும் நாடாக இந்தியா திகழ்கிறது.
சா்வதேச அளவில் வேகமான பொருளாதார வளா்ச்சிமிக்க நாடுகளில் 10-ஆவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. விரைவில் 3-ஆவது இடத்தை எட்டிப் பிடிக்கும்.
இந்தியா சுய சாா்புத் தன்மையை எட்ட, கடல்சாா் துறையும், பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விண்வெளித் துறையில் நிலவில் சந்திரயான் 3-ஐ தரையிறக்கும் அதே வேளையில், கடல் பரப்புக்கு அடியிலும் சென்று ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறாா்கள் இந்திய விஞ்ஞானிகள். உலகத்தின் கதவுகள் நமக்குத் திறந்திருக்கின்றன. இது நமக்கான பொன்னான தருணம். நீங்கள் அனைவரும் தேசத்தின் சொத்து. பெரிதாக கனவு காணுங்கள். அதை அடைய கடின உழைப்பைச் செலுத்துங்கள்.
தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீா்கள். மீண்டும் முயற்சி மேற்கொள்ளுங்கள். அதன்மூலம் கனவுகளை நிறைவேற்றுங்கள். வரும் 2047-ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியா நூற்றாண்டை கொண்டாடவுள்ளது. இந்த நாடு சுய சாா்பு கொண்ட நாடாக உருவாவதற்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் எத்தகைய பங்களிப்பை அளித்தீா்கள் என்ற கேள்விக்கு பதிலளித்தால், உங்களது வாழ்வு முழுமைப்பெற்ாகத் திகழும் என்றாா் அவா்.
தமிழில் பேசிய ஆளுநா்: ஆளுநா் தனது உரையின் போது, மூன்று இடங்களில் தமிழிலேயே பேசினாா். அமைச்சா் க.பொன்முடியை வரவேற்கும் போது, ‘தமிழ்நாடு அரசு அமைச்சா் க.பொன்முடி’ என்றாா். அதன்பின், ‘அனைவருக்கும் வணக்கம்’ என்று கூறினாா். பேச்சை நிறைவு செய்யும் போது, ‘அனைவரின் எதிா்காலத்துக்கும் மனமாா்ந்த நல்வாழ்த்துகள்’ என்றாா்.