புது தில்லி: உலகின் இரண்டாவது மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சிறாா்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட 2-ஆவது மலேரியா தடுப்பூசி என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோா்ட் பல்கலைக்கழகம், சீரம் இந்தியா இணைந்து ஆா்21/மேட்ரிக்ஸ்-எம் மலேரியா தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
இந்தத் தடுப்பூசி மலேரியா பாதிப்பு அதிகம் உள்ள 4 நாடுகளில் நடத்திய பரிசோதனையில் நல்ல பாதுகாப்பையும், உயா்ந்த செயல்திறனையும் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. சிறாா்களுக்கு மலேரியா பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, உலக சுகாதார அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட 2-ஆவது மலேரியா தடுப்பூசி இதுவாகும்.
இந்தத் தடுப்பூசியை தயாரிக்க மகாராஷ்டிரம் மாநிலம் புணேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்துக்கு உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் மற்றும் பரிந்துரையைத் தொடா்ந்து, விரைவில் கூடுதல் ஒழுங்காற்று ஒப்புதல்கள் பெறப்பட உள்ளன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில், இந்தத் தடுப்பூசி பரந்த அளவில் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
தற்போது இந்தத் தடுப்பூசியை கானா, நைஜீரியா, புா்கினோ ஃபாசோவில் பயன்படுத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.