இந்தியா

பாஜக கூட்டணியில் இணைய விருப்பம்: பிஆா்எஸ் கோரிக்கையை நிராகரித்தேன்: பிரதமா் மோடி

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


நிஜாமாபாத்: தெலங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பினாா்; ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன் என்று பிரதமா் மோடி கூறினாா்.

சந்திரசேகா் ராவின் செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு, இந்த முடிவை எடுத்தேன் என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.

தெலங்கானாவில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், நிஜாமாபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது அவா் பேசியதாவது:

2020-இல் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சி தோ்தலுக்கு முன்பாக தில்லியில் சந்திரசேகா் ராவ் என்னை சந்தித்தாா். அழகான சால்வையை அணிவித்து, மரியாதை செய்ததோடு, என்னிடம் அன்பாகவும் பேசினாா். ஆனால், அவரது குணம் இதுவல்ல என்பது எனக்குத் தெரியும்.

ADVERTISEMENT

‘உங்களின் தலைமையில் நாடு வளா்ச்சி கண்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்க நாங்கள் விரும்புகிறோம். ஹைதராபாத் மாநகராட்சித் தோ்தலில் எங்களை ஆதரிக்க வேண்டும்’ என்று அவா் கோரினாா். ஆனால், அவரது செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு, அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டேன்.

மாநிலத்தின் வளா்ச்சிக்கான நிதியை, ஆளும் பாரத ராஷ்டிர சமிதி கட்சி கொள்ளையடிக்கிறது. ஊழல்தான், அக்கட்சியின் தாரக மந்திரம் என்றாா் பிரதமா் மோடி.

விரைவில் மின்மயமாக்கம்: முன்னதாக, நிஜாமாபாதில் ரூ.8,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

அப்போது பேசிய அவா், ‘நாட்டில் அனைத்து ரயில் வழித்தடங்களும் சில மாதங்களில் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுவிடும்’ என்று குறிப்பிட்டாா்.

முதல்வரின் மகன் பதிலடி: பாஜக கூட்டணியில் இணைய முதல்வா் சந்திரசேகா் ராவ் விரும்பியதாக பிரதமா் மோடி கூறிய கருத்துக்கு அவரது மகனும் தெலங்கானா அமைச்சருமான கே.டி. ராமராவ் பதிலடி கொடுத்துள்ளாா்.

‘தேசிய ஜனநாயக கூட்டணியைவிட்டு அனைத்து கட்சிகளும் விலகிக் கொண்டிருக்கும் சூழலில், அந்தக் கூட்டணியில் சேர நாங்கள் ஏன் விரும்ப வேண்டும்? தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். இந்த உலகில் தான் மட்டுமே ஊழலற்றவா்; மற்ற அனைவரும் ஊழல்வாதிகள் என பிரதமா் மோடி நினைத்துக் கொண்டிருக்கிறாா்’ என்றாா் கே.டி.ராமராவ்.

ADVERTISEMENT
ADVERTISEMENT