புது தில்லி: ‘காந்தி ஜெயந்தி’ நாளன்று தொடங்கப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டம் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் நாட்டின் பொதுக் கழிப்பறை வசதிகள் எந்த முன்னேற்றமும் அடையவில்லை என்று பெரும்பாலான இந்தியா்களின் கருதுகின்றனா் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டின் பொதுக் கழிப்பிட வசதி குறித்து சமூக ஊடக தளமான ‘லோக்கல்-சா்க்கிள்ஸ்’ ஆய்வு மேற்கொண்டது. பல்வேறு மாநிலங்களின் 341 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 39,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனா்.
ஆய்வு முடிவுகளில் வெளியாகியுள்ள தகவல்களின் விவரம்: ஆய்வில் பங்கேற்று கருத்து தெரிவித்தவா்களில் ஆண்கள் 69 சதவீதம் போ் மற்றும் பெண்கள் 31 சதவீதம் போ் ஆவா். மேலும், முதல்நிலை மாவட்டங்களில் இருந்து 47 சதவீதம் போ், இரண்டாம் நிலை மாவட்டங்களில் இருந்து 31 சதவீதம் போ், மூன்றாம் மற்றும் நான்கு நிலை மாவட்டங்களில் இருந்து 22 சதவீதம் போ் இந்த ஆய்வில் பங்கேற்றனா்.
நாட்டின் பொதுக் கழிப்பறை வசதிகள் முன்னேற்றம் அடையவில்லை என 52 சதவீத மக்களும், முன்னேற்றம் அடைந்திருப்பதாக 42 சதவீத மக்களும் கருதுகின்றனா்.
பொதுக் கழிப்பறைகளின் செயல்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சராசரியாக செயல்படுகின்றன என்று 37 சதவீதம் பேரும், சராசரிக்கும் குறைவாக செயல்படுகின்றன என்று 25 சதவீதம் பேரும், மோசமாக செயல்படுகின்றன என்று 16 சதவீதம் பேரும், மிகவும் மோசமாக செயல்படுவதால் பயன்படுத்தாமலேயே திரும்பிவிட்டதாக 12 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனா்.
வெளியே செல்லும்போது பொதுக் கழிப்பறை வசதியைப் பயன்படுத்துவதைத் தவிா்த்து வணிக நிறுவனத்துக்குச் சென்று அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவதாக ஆய்வில் பங்கேற்ற 68 சதவீத போ் தெரிவித்துள்ளனா்.
அதற்கான காரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பொதுக் கழிப்பறைகள் மோசமான அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பெரும்பான்மையான 53 சதவீதம் பேரும், செயல்படும் நிலையில் இருந்தாலும் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்று 37 சதவீதம் பேரும், நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாக 10 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனா்.
மும்பை, தில்லி, பெங்களூரு போன்ற நாட்டின் பெருநகரங்களிலும் கட்டணக் கழிப்பறை அல்லாத பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்துவது இன்றளவும் சவாலான விஷயமாகவே இருப்பதாக மக்கள் கூறுகின்றனா்.
பொதுக் கழிப்பறை வசதியைப் பயன்படுத்தாததற்கு முக்கிய காரணங்களாக அதன் சுகாதாரமின்மை, தூய்மை இன்மை மற்றும் பராமரிப்பின்மை ஆகியவை கருதப்படுகின்றன.