இந்தியா

‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்துக்கு சீல் வைப்பு: சோதனைக்குப் பின் தில்லி போலீஸ் நடவடிக்கை

4th Oct 2023 01:58 AM

ADVERTISEMENT


புது தில்லி: தில்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ இணைய செய்தி நிறுவனத்துக்கு தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.

முன்னதாக, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளா்கள் மற்றும் ஊழியா்களுக்குச் சொந்தமான 30 இடங்களில் அதிகாலை முதல் தீவிர சோதனை நடத்திய போலீஸாா், பின்னா் அந்த நிறுவனத்துக்கு சீல் வைத்து மூடினா்.

சீன சாா்பு கொள்கையைப் பரப்புவதற்காக அந்நாட்டு நிறுவனங்கள் சாா்பில் இந்த இணைய செய்தி நிறுவனத்துக்கு நிதியுதவி அளிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்த நடவடிக்கையை தில்லி போலீஸாா் மேற்கொண்டுள்ளனா்.

இந்தச் செய்தி நிறுவனத்தின் மீது பணமோசடி புகாரின் பேரில் கடந்த 2021-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். பின்னா், இந்த நிறுவனம் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடா்புடைய அமெரிக்கத் தொழிலதிபரிடமிருந்து ரூ. 38 கோடி நிதி பெற்ாக ‘நியூயாா்க் டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்தப் புகாரைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீண்டும் அண்மையில் சோதனை மேற்கொண்டனா். நிறுவன ஊழியா்களின் மின்னஞ்சல் உரையாடல்கள், பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் அப்போது தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், நியூஸ்கிளிக் நிறுவனத்தில் பணிபுரியும் செய்தியாளா்கள் மற்றும் ஊழியா்களுக்குச் சொந்தமான இடங்களில் தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டதோடு, தில்லியில் உள்ள அந்தச் செய்தி நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் சீல் வைத்தனா்.

இதுகுறித்து தில்லி போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘செய்தி நிறுவனத்துக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதன் அடிப்படையில், தில்லி-தேசிய தலைநகர மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை அந்த நிறுவன செய்தியாளா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதன் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீா் புா்காயஸ்தாவை தெற்கு தில்லியில் அமைந்துள்ள நியூஸ்கிளிக் அலுவலகத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்களும் அங்கு சென்று ஆதாரங்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டனா்’ என்றனா்.

மேலும், ஊா்மிலேஷ், அபிஷா் சா்மா, அனிந்தியோ சக்கரவா்த்தி, பரன்ஜோய் குஹா தாக்குா்தா, சொஹயில் ஹாஷ்மி, டி.ரகுனந்தன் உள்ளிட்ட அந்த நிறுவனத்தைச் சோ்ந்த சில செய்தியாளா்கள் தில்லி லோதி சாலையில் அமைந்துள்ள தில்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவா்களிடம் 25 கேள்விகளைக் கொண்ட பட்டியலுடன் விசாரணை நடத்தப்பட்டதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் செய்தியாளா்களின் வெளிநாட்டுப் பயணங்கள், ஷாஹீன் பாகில் நடைபெற்ற போராட்டம், விவசாயிகள் போராட்டம் தொடா்பான கேள்விகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

‘அமலாக்கத் துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் மீது புதிதாக யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த நிறுவனத்தைச் சோ்ந்த சில செய்தியாளா்களின் கைப்பேசிகள், மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனத்தின் செய்தியாளா் அபிஷா் சா்மா விசாரணைக்குப் பிறகு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்’ என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: செய்தி நிறுவனத்தில் தில்லி போலீஸாரின் சோதனைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி கட்சிகளும், இந்திய பத்திரிகையாளா் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆட்சிக்கு எதிராக உண்மையைப் பேசிய தனிப்பட்ட செய்தியாளா்களுக்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசும், அதன் கருத்தியல் ரீதியில் ஒன்றிணைந்துள்ள அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. ஆட்சேபத்துக்குரிய செய்திகளை வெளியிடுவதிலிருந்து ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ‘தகவல்தொழில்நுட்ப விதிகள் 2021’ போன்ற பிற்போக்கான கொள்கைகளை பாஜக அரசு முன்னெடுத்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பாஜக தனது தவறுகளை மறைப்பது மட்டுமின்றி, முதிா்ந்த ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் உலகளாவிய நிலையையும் சமரசம் செய்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவு தலைவா் பவன் கெரா கூறுகையில், ‘பிகாரில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் வெளிவரும் புதிய தகவல்கள் மற்றும் நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எழும் கோரிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நடவடிக்கையே, செய்தி நிறுவனத்தின் மீதான இந்தச் சோதனை’ என்று குறிப்பிட்டாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘இந்தச் சோதனை பாஜக தோல்வியின் அறிகுறி. நோ்மையான பத்திரிகையாளா்களுக்கு எதிராக பாஜக ஆட்சியாளா்கள் இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்வது புதிதல்ல. ஆனால், அரசு விளம்பரங்கள் என்ற பெயரில் ‘மித்ரா’ சேனல்களுக்கு ஒவ்வொரு மாதமும் எத்தனை கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது என்ற செய்தியையும் யாராவது வெளியிட வேண்டும்’ என்றாா்.

ஆம் ஆத்மி தலைமை தேசிய செய்தித் தொடா்பாளா் பிரியங்கா காக்கா் கூறுகையில், ‘செய்தியாளா்களைக் கைது செய்வதன் மூலம் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைப் போன்று மோடி அரசு நாடகமாடுகிறது. ஏனெனில், சீனாவுடன் நேரடியாக மோத மோடி அரசுக்கு துணிச்சல் இல்லை’ என்றாா்.

இந்திய பத்திரிகையாளா் சங்கம் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நிலைமையை உன்னிப்பாக கனித்து வருகிறோம். விரிவான அறிக்கை வெளியிடப்படும். பத்திரிகையாளா்களுக்கு சங்கம் உறுதியாக துணைநிற்கும். விரிவான அறிக்கை வெளியிட மத்திய அரசை வலியுறுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய அமைச்சா் கருத்து: ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், இந்தச் சோதனை குறித்து கூறுகையில், ‘யாராவது தவறான செயல்களில் ஈடுபட்டால் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ளும். நீங்கள் சட்டவிரோதமாக பணம் பெற்றாலோ அல்லது ஆட்சேபத்துக்குரிய வகையில் செயல்பட்டாலோ விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த முடியாது என்று எங்கும் எழுதப்படவில்லை’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT