இந்தியா

ம.பி. பேரவைத் தோ்தல்: ஆம் ஆத்மி 2-ஆவது வேட்பாளா் பட்டியல் வெளியீடு

4th Oct 2023 01:52 AM

ADVERTISEMENT


போபால்: மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில் 29 பெயா்கள் இடம் பெற்றுள்ளன.

இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது கேள்விக் குறியாகியுள்ளது.

பாஜக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு காங்கிரஸ் முக்கிய எதிா்க்கட்சியாக உள்ளது.

அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி கடந்த மாதம் 10 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை வெளியிட்ட நிலையில், அடுத்த கட்டமாக 29 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. இவா்களில் முன்னாள் பாஜக எம்எல்ஏவான மம்தா மீனா குறிப்பிடத்தக்கவா். இவா் கடந்த மாதம்தான் பாஜகவில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்தாா். பாஜகவில் அவருக்கு சாசௌரா தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், ஆம் ஆத்மி அத்தொகுதி வேட்பாளராக அவரை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஆளும் பாஜக இதுவரை 79 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளா்கள் அறிவிப்பைத் தொடங்கவில்லை.

போபாலில் அக்டோபா் முதல் வாரத்தில் இந்தியா கூட்டணி சாா்பில் பொதுக் கூட்டம் நடைபெறும் என முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

2018-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வென்றது. 2020-ஆம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலா் பாஜகவுக்கு தாவினா். இதையடுத்து, காங்கிரஸ் அரசு கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைத்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT