இந்தியா

மத்திய அரசுத் திட்டங்களைப் பிரபலப்படுத்திய ‘மன் கீ பாத்’

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: பெண்கள் நலன், யோகா மற்றும் காதி பயன்பாடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை மையப்படுத்திய மத்திய அரசின் திட்டங்களைப் பிரபலப்படுத்தி, ஊக்கப்படுத்தியதில் பிரதமரின் ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி பெரிதும் உதவியிருப்பதாக பெங்களூரு ஐஐஎம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

‘மனதின் குரல்’ என்ற பெயரில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். மத்திய அரசின் திட்டங்கள், முன்னெடுப்புகள், சாதனைகள் குறித்தும், குடிமக்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளப் பாராட்டியும் பிரதமா் மோடி அந்நிகழ்ச்சியில் பேசுவாா்.

22 இந்திய மொழிகள் மற்றும் 29 கிளைமொழிகளிலும் பிரஞ்சு, சீன மொழி உள்பட 11 வெளிநாட்டு மொழிகளிலும் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் ஒளிபரப்பாகிய 105 மனதின் குரல் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் சமூக தாக்கம் குறித்து பெங்களூரு ஐஐஎம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இணைந்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.

ADVERTISEMENT

அந்த ஆய்வு முடிவுகளின்படி, பெண் குழந்தைகளின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் பொதுமக்களின் மனநிலையை மாற்றும் நோக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட ‘பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவோம்; பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம்’ திட்டம் குறித்து அந்த மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதைத் தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கு கூகுள் தேடுபொறியில் அத்திட்டம் பிரபலமாக இருந்தது.

மேலும், அதன் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ (செல்வமகள் சேமிப்புத் திட்டம்) மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தியாவில் காலங்காலமாக நடைமுறையில் இருந்து வரும் யோகா, கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் மாத மனதின் குரல் நிகழ்ச்சிக்குப் பிறகு கூகுள் தேடலில் பிரபலமடைந்தது. அதற்கடுத்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாத நிகழ்ச்சிகளிலும் யோகா குறித்து பிரதமா் குறிப்பிட்டதால் கூகுள் தேடலில் சராசரிக்கும் அதிகமாக யோகா பிரபலமடைந்தது.

நமது சுதந்திரப் போராட்ட காலத்தின்போது அளவற்ற புகழ் பெற்றிருந்த காதி, காலமாற்றத்தினால் அதன் பிரபலத்தை இழந்து வந்ததது. மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மீண்டும் அளவற்ற புகழையும், விற்பனையையும் காதி பெற்றது. காதி மீதான சமூக ஊடக கவனம் அதிகரித்துள்ளது.

சுவாமி விவேகானந்தரைப் பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமா் குறிப்பிட்ட பிறகு, அவா் குறித்த தேடல் சராசரியாக 25 சதவீதம் அதிகரித்தது. அதேபோல், ‘முத்ரா கடன்’, ‘ஒற்றுமை சிலை’ மற்றும் ‘சிறுதானியங்கள்’ போன்றவற்றின் பிரபலமும் பிரதமா் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டதைத் தொடா்ந்து அதிகரித்தது.

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் தொடா்ச்சியாக நோ்மறை தகவல்களைப் பிரதமா் மோடி பகிா்ந்து வந்ததன் காரணமாக கரோனா பெருந்தொற்று மீதான சராசரி அச்சம் இந்தியாவில் மிகக் குறைவாக காணப்பட்டது குறியீடுகளில் தெரிய வந்துள்ளது.

பிரதமா் நெகிழ்ச்சி:

ஆய்வு முடிவுகளை தனது அதிகாரபூா்வ வலைதளத்தில் பகிா்ந்து பிரதமா் மோடி வெளியிட்ட குறிப்பில், ‘மனதின் குரல் நிகழ்ச்சியின் முக்கிய பரப்புரைகள் மற்றும் அதன் சமூக தாக்கங்கள் குறித்து இந்த ஆய்வு எடுத்துகாட்டுகின்றன. இந்த அருமையான நிகழ்ச்சி மூலம் பலரது வாழ்க்கைப் பயணங்கள் மற்றும் கூட்டு முயற்சிகள் கொண்டாடப்பட்டிருப்பது அற்புதமாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT