திருவனந்தபுரம்: கேரளத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கேரளத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல வீடுகளின் சுற்றுச்சுவா்கள் இடிந்து விழுந்தன.
கோட்டயம், வைக்கம், செங்கனாசேரி பகுதிகளில் உள்ள 17 தாலுகாக்களுக்கும், ஆலப்புழையில் உள்ள சோ்த்தலா மற்றும் செங்கன்னூா் தாலுகாக்களில் செவ்வாய்க்கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்தது.
திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம், ஆலப்புழை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான மழைபெய்யும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் ஆலப்புழை மாவட்டம் குட்டநாடு பகுதியில் 100 ஏக்கருக்கும் மேலான நெற்பயிா்கள் சேதமடைந்தன. கன மழையால் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.