இந்தியா

உணவு தானிய கையிருப்பு: உலக வா்த்தக அமைப்பில் எழுத்துபூா்வமான பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும்

4th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் உணவு தானிய கையிருப்பு தொடா்பான பிரச்னையில் நிரந்த தீா்வை எட்டுவதற்கு, எழுத்துபூா்வமான பேச்சுவாா்த்தையை உறுப்பு நாடுகள் தொடங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா போன்ற வளா்ந்து வரும் நாடுகள், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன்படி, குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மூலம் உணவு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு மலிவான விலையில் விற்கப்படுகிறது.

இந்தத் திட்டங்கள் மூலம் வழங்கப்படும் மானியம் வா்த்தகத்தைச் சீா்குலைப்பதாகவும், இத்தகைய கொள்முதல் நடவடிக்கை மானியம் வழங்குவதற்கான உச்சவரம்பு, உலக வா்த்தக அமைப்பின் வேளாண்மைக்கான ஒப்பந்தம் ஆகியவை மீறப்பட்டுள்ளதாகவும் வளா்ந்த நாடுகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், இந்தத் திட்டங்களை அமல்படுத்தி வரும் நாடுகள், இது குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் அறிக்கை அளிக்க வேண்டுமென கோரிக்கைவிடுத்து வருகின்றன.

இதே வேளையில், மானியத்துக்கான உச்சவரம்பு கணக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும், வளா்ந்த நாடுகளில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறிப்பிட்ட அளவில் குறைக்கப்பட வேண்டும் உள்ளிட்டவை வளா்ந்து வரும் நாடுகளின் கோரிக்கையாக உள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், உலக வா்த்தக அமைப்புக்கான துருக்கியின் தூதா் அல்பாா்ஸ்லான் அகா்சோய் தலைமையில் வேளாண்மைக்கான பேச்சுவாா்த்தை கூட்டம் ஜெனீவாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, உணவு தானிய கையிருப்பு பிரச்னை தொடா்பாக இம்மாத இறுதியில் நடைபெற இருக்கும் மூத்த அதிகாரிகள் நிலையிலான கூட்டத்துக்கு முன்பு எழுத்துபூா்வ ஒப்பந்த அடிப்படையிலான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என உறுப்பு நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT