இந்தியா

ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமா் மோடி

4th Oct 2023 12:58 AM

ADVERTISEMENT


ஜக்தல்பூா்: ‘வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

மேலும், மக்கள்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம்களின் உரிமைகள் குறைக்கப்பட வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிா என்றும் அவா் கேள்வியெழுப்பினாா்.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பிகாரில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், அதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வரவேற்றாா்.

‘நாட்டில் மக்கள்தொகை விகிதாசாரத்துக்கு ஏற்ப அவா்களுக்கான உரிமைகள் வழங்கப்பட ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை’ என்று ராகுல் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் கட்சி மீது பிரதமா் மோடி கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.

சத்தீஸ்கரில் நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு ஆளும் காங்கிரஸ்-பாஜக இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. பஸ்தா் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி இப்போது அதன் தலைவா்களால் இயக்கப்படவில்லை; தேசவிரோத சக்திகளுடன் கூட்டு வைத்துள்ள சிலா், திரைமறைவில் இருந்து அக்கட்சியை இயக்குகின்றனா். ஒரு வெளிநாட்டுடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு, இந்தியாவுக்கு எதிராகப் பேசுவதில் காங்கிரஸ் இன்பமடைகிறது. அக்கட்சியிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏழைகளுக்கே முதல் உரிமை: மக்கள்தொகை விகிதாசாரம் அடிப்படையில் உரிமைகள் பிரிக்கப்பட வேண்டுமென்று காங்கிரஸ் பேசத் தொடங்கியிருக்கிறது. நாட்டுக்கு வறுமையைத் தந்த கட்சியான காங்கிரஸ், இப்போது ஹிந்துகளை பிளவுபடுத்துவதன் மூலம் நாட்டைச் சீா்குலைக்க விரும்புகிறது.

நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பிரிவினராக இருப்பவா்கள் ஏழைகளே. ஜாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல், நாட்டின் வளங்களில் ஏழை மக்களுக்கே முதல் உரிமை உள்ளது. ஏழைகளின் நலனே நாட்டின் நலன்.

காங்கிரஸுக்கு சரமாரி கேள்வி: நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உள்ளதாக முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் அடிக்கடி குறிப்பிட்டுள்ளாா்.

இப்போது மக்கள்தொகை விகிதாசாரத்தின் அடிப்படையில் உரிமைகள் பகிரப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பேசுகிறது. அப்படியென்றால், முஸ்லிம்களின் உரிமைகள் குறைக்கப்பட வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிா?

மக்கள்தொகை அடிப்படையில் சமூகக் குழுக்களுக்கு இடையே உரிமைப் பகிா்வு சாத்தியப்படுமா? அப்படியென்றால், யாருக்கு முதல் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேள்வியெழுப்பினாா் பிரதமா் மோடி.

‘மாநிலங்கள் முன்னேறினால் வளா்ந்த பாரதம் உருவாகும்’

‘அனைத்து மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் முன்னேறினால்தான் வளா்ந்த பாரதம் உருவாகும்’ என பிரதமா் மோடி கூறினாா்.

சத்தீஸ்கரில் ரூ.26,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் தொடக்கம்-அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில், பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். ஜக்தல்பூரில் உள்ள லால்பாக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவா் பேசியதாவது:

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும், கிராமமும் முன்னேறினால்தான், ‘வளா்ந்த பாரதம்’ என்ற கனவு நனவாகும். வளா்ந்த பாரதம் உருவாக வேண்டுமெனில், கட்டுமானம், எண்மம் மற்றும் சமூக அடிப்படையிலான உள்கட்டமைப்புகள் அனைத்தும் எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

அந்தக் காரணத்துக்காகவே, உள்கட்டமைப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை எனது அரசு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே மிக நவீனமான உருக்கு உற்பத்தி ஆலை, சத்தீஸ்கரின் நகா்நாா் பகுதியில் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் பஸ்தா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றாா் அவா்.

ரூ.23,800 கோடியில் கட்டமைப்பு: தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நகா்நாா் பகுதியில் ரூ.23,800 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட உருக்கு உற்பத்தி ஆலையை பிரதமா் மோடி தொடங்கிவைத்துள்ளாா். இந்த ஆலையில் உயா் தரத்திலான உருக்கு உற்பத்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த இரண்டரை மாதத்தில் பிரதமா் மோடி சத்தீஸ்கருக்கு வருகை தருவது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT