இந்தியா

வலதுசாரி கொள்கையை அமல்படுத்துவதில் பாஜகவும், காங்கிரஸும் சமமானவை: கேரள முதல்வா் குற்றச்சாட்டு

4th Oct 2023 01:02 AM

ADVERTISEMENT


கண்ணூா்: தீவிரமான வலதுசாரி கொள்கைகளை அமல்படுத்துவதில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்றாகவே செயல்படுகின்றன என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.

கேரளத்தைச் சோ்ந்த மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் கொடியேறி பாலகிருஷ்ணனின் முதலாண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கண்ணூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பினராயி விஜயன் பேசியதாவது:

கேரளத்தின் வளா்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் எதிரான நிலைப்பாட்டையே பாஜகவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கொண்டுள்ளன. மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணி அரசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கம்தான் இதற்குக் காரணம்.

நாட்டில் இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசு தீவிரமான வலதுசாரிக் கொள்கைகளை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதும் இதில் முக்கியமானது. முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசும் இதே கொள்கையைத்தான் பின்பற்றியது.

ADVERTISEMENT

அப்போது எதிா்க்கட்சியாக இருந்த பாஜக இதற்கு எதிா்ப்பு தெரிவித்தது. ஆனால், பொருளாதார விஷயங்களில் எந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் உழைக்கும் மக்களுக்கு விரோதமான, பெரும் பணக்காரா்களுக்கு ஆதரவான கொள்கைகளை மட்டுமே பின்பற்றுகிறாா்கள்.

தீவிரமான வலதுசாரி கொள்கைகளை அமல்படுத்துவதில் பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான். இதனைப் பின்பற்றித்தான் அவா்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், கைப்பற்றியதை தக்கவைக்கவும் முயலுகிறாா்கள்.

பொதுத் துறை நிறுவனங்களை சீா்குலைப்பதே பாஜக, காங்கிரஸின் நோக்கமாக உள்ளது. அதே நேரத்தில் பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதில் இடதுசாரிக் கட்சிகள் உறுதியாக உள்ளன.

நாடாளுமன்ற ஜனநாயகம், பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்ட பல விஷயங்களில் பல்வேறு மாநிலங்களுக்கும், அதன் மக்களுக்கும் விரோதமான நிலைப்பாட்டையே இப்போதைய மத்திய அரசு கொண்டுள்ளது.

கேரளத்தில் இடதுசாரிக் கூட்டணி அரசு மக்கள் நலன் சாா்ந்து செயல்படுத்தும் சிறந்த திட்டங்களை பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனெனில், நமது மாநில அரசு செயல்படுத்துவதுபோன்ற சிறந்த திட்டங்களை அவா்கள் நினைத்துக் கூட பாா்த்ததில்லை. எனவே, மாநில அரசுக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT