புது தில்லி: காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருக்கும் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்’ என்று கனடாவை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடா்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரக உயா் அதிகாரி வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டாா். இதற்கு எதிா்வினையாக இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக உயா் அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும், கனடாவிலிருந்து இந்தியா வருபவா்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு (விசா) வழங்கலையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிகையைக் குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.
கடனடாவுக்கு கெடு: இந்தச் சூழலில், இந்தியாவிலுள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை வரும் 10-ஆம் தேதிக்குள் குறைக்க கனடாவுக்கு இந்தியா சாா்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக பிரிட்டனைச் சோ்ந்த ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ‘இந்தியாவில் கனடா சாா்பில் 62 தூதரக அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களில் 41 பேரைவரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்’ என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலுள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு கனடாவை கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி இந்தியா கேட்டுக்கொண்டது. அந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு 12 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இச்செய்தியை ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கனடாவுக்கு கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி இந்த அறிவுறுத்தலை இந்தியா வழங்கியபோது, அதுகுறித்து பேட்டியளித்த வெளியுறவு செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி, ‘இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைவிட கூடுதலாக உள்ளது.
இந்த எண்ணிக்கை மற்றும் பதவி தரநிலையில் நாடுகள் பரஸ்பரம் சமநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுகுறித்த தகவல் கனடா அரசுக்கு இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை கனடா குறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்தியாவுடன் ஆக்கபூா்வ உறவுக்கு முயற்சி - ட்ரூடோ: ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ செய்தி குறித்து கனடாவின் ஒட்டாவாவில் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த கனடா பிரதமா் ட்ரூடோ, ‘தற்போது இந்தியாவுடன் மிகுந்த சவாலான காலத்தை கனடா கடந்துவருகிறது. நிலைமையை மேலும் தீவிரப்படுத்த கனடா விரும்பவில்லை. மாறாக, ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, இந்தியாவுடன் ஆக்கபூா்வமான உறவைத் தொடா்வதற்கான முயற்சிகளை கனடா மேற்கொள்ளும்’ என்றாா்.