புது தில்லி: கிழக்கு லடாக் உள்ளிட்ட எல்லைக் கட்டுப்பாடு கோடுப் பகுதிகளை இந்திய விமானப்படை தீவிரமாக கண்காணித்து வருவதாக விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா். சௌதரி தெரிவித்தாா்.
இந்திய விமானப்படை தினம் அக்டோபா் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விமானப்படையை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆா். சௌதரி செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
உலகளவில் நிலவுகின்ற அரசியல் அசாதாரண சூழல் காரணமாக வலிமையான ராணுவத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய பங்கு விமானப்படைக்கு உள்ளது.
எனவே அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் ரூ.2.5 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரையில் ராணுவ உபகரணங்கள் உற்பத்தி செய்யவும், தளவாடங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல் 97 தேஜஸ் இலகுரக போா் விமானங்களை வாங்கவும் முடிவு செய்துள்ளோம். இதுவரை ரஷியாவிடமிருந்து 3 எஸ்-400 ஏவுகணைகள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 எஸ்-400 ஏவுகணைகள் அடுத்தாண்டு பெறப்படும்.
‘அக்னிபத்’ திட்டத்தையும் விமானப் படை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும் கிழக்கு லடாக் உள்ளிட்ட நாட்டின் எல்லைக் கட்டுப்பாடு கோடுப் பகுதிகளையும் நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.