தில்லியில் தனியார் இணையதள செய்தி ஊடகமான 'நியூஸ் கிளிக்' நிறுவனத்திற்கு தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது.
தில்லியில் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் தில்லி காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகம் மட்டுமின்றி, அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் தில்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
இதையும் படிக்க | ஊடக நிறுவனத்தைத் தொடர்ந்து சீதாராம் யெச்சூரி வீட்டில் தில்லி போலீசார் சோதனை
சோதனையில் நிறுவன ஊழியர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடந்த 3 ஆண்டுகளில் 38.05 கோடி பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஊடக நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே தில்லி போலீசார் சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக செய்தி பதிவிட பணம் பெற்றதாகக் கூறி, இன்று மாலை தில்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் ஊடக நிறுவனம் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.